Skip to main content

“நான் மிகவும் ருசித்த இனிப்புகள்” - ஊட்டி சாக்லேட் ஃபேக்டரியில் ராகுல் விசிட்

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Rahul's visit to the Ooty Chocolate Factory

 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது நாடாளுமன்றத் தொகுதியான கேரளா மாநிலம் வயநாடு தொகுதிக்கு சமீபத்தில் சென்றிருந்தார். அந்த பகுதிக்குச் செல்லும் வழியில் ஊட்டிக்குச் சென்று அங்கு புகழ்பெற்ற சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்று பார்வையிட்டார். அவர் அங்கு நிறுவனத்தின் தயாரிப்புகளை சுவைத்து அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து, அந்த ஊழியர்களுடன் இணைந்து இனிப்பு சாக்லேட்டை தயாரிக்கவும் செய்தார். மேலும், 70க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டு, ஒரு தம்பதி இயக்கி வந்த அந்த சாக்லேட் நிறுவனத்தைப் பாராட்டினார். 

 

ராகுல் காந்தி சாக்லேட் தயார் செய்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டுள்ளார். அத்துடன் சிறு, குறு தொழிற்துறையைப் பாதுகாக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரியை ஒரே சதவீத வரி முறை அவசியம்  வேண்டும் என்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது தொடர்பாக ராகுல் காந்தி,  “எனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாடு பகுதிக்குச் செல்லும் வழியில் ஊட்டியில் உள்ள மிகவும் பிரபலமான சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலையைப் பார்வையிட்டது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இந்த தொழில் நிறுவனத்தை ஒரு தம்பதியினர் நடத்தி வருவது என்பது எனக்கு மிகவும் ஊக்கமாக இருந்தது. 70 பெண்கள் குழுக்கள் கொண்ட இந்த நிறுவனம் நான் மிகவும் ருசித்த இனிப்புகளை தயாரித்து வழங்கியது. 

 

எனினும், நாடு முழுவதும் உள்ள இதுபோன்ற சிறு, குறு தொழிற் நிறுவனங்கள், மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரியால் மிகவும் பாதிக்கப்படுகின்றன. சிறு, குறு தொழிற் நிறுவனங்களுக்கு ஊறு விளைவிக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு துணையாக நிற்கிறது. ஆனால், நான் இங்கு சந்தித்த பெண்களை போல் கடின உழைப்பாளிகளால் தான் நம் நாடு வளர்ச்சி பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க நாடு முழுவதும் அனைத்திற்கும் ஒரே சதவீத ஜி.எஸ்.டி வரி முறை அவசியம். அதுதான் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்லும். பெண்கள் தலைமையிலான இதுபோன்ற குழுக்கள் அனைத்து ஆதரவுக்கும் தகுதியானவர்கள்” என்று தெரிவித்தார்.

 

இந்த வீடியோவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் அவர், “இந்திய ஒற்றுமை பயணத்தை முன்னெடுத்துச் செல்லும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் பெண்களால் நடத்தப்படும் சாக்லேட் தொழிற்சாலைக்குச் சென்றார். அந்த பெண்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தார். அவர்களின் கடின உழைப்பை பாராட்டி அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டுப் புரிந்து கொண்டார்.  நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையைச் சேர்ந்தவர்களின் குறைகளை இதுபோல் கேட்டறிய வேண்டும். அவர்களுக்கு ஆதரவு தேவை” என்று குறிப்பிட்டு இருந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்