காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி இந்தியா முழுதும் சுமார் 12 மாநிலங்களில் 3,570 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இந்த பயணத்திற்கான திட்ட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து நடைபயணத்தை நேற்று ராகுல் துவங்கினார்.
நடைபயணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க இந்த கூட்டம் முதலில் பொதுக்கூட்டம் நடக்கும் திடலுக்கு பயணம் மேற்கொண்டது. பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,"தமிழகத்திற்கு வந்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். ஒற்றுமை பயணத்தை துவங்கிவைத்து வாழ்த்துக் கூறிய சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
இந்திய மக்களை பாஜக புரிந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளை சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்துக் கட்டுப்படுத்த நினைக்கிறார்கள். மதம், மொழியை வைத்து நாட்டை பிளவுபடுத்த நினைக்கிறது பாஜக.ஆனால் அது நடக்காது. மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டத்திற்கு இந்தியா உள்ளாகியுள்ளது. விலைவாசி விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கும் காலகட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஆங்கிலேய ஆட்சியின் அணுகுமுறைதான் தற்பொழுது பாஜக ஆட்சியிலும் இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை சில தொழிலதிபர்கள் கட்டுக்குள் கொண்டு வைத்திருக்கிறார்கள்" என கூறியிருந்தார்.
தொடர்ந்து ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். இதில் நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர் மணிரத்னமும், அவரது தந்தை சண்முகம் அவருடன் நடைப்பயணத்தை மேற்கொண்டனர். அந்த நடைப்பயணத்தில் ராகுல் காந்தியும் அனிதாவின் சகோதரர் மணிரத்னமும் பேசிக்கொண்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.