உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 % வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டதால் பறக்கும் படைகள் உள் மாவட்டத்தில் கலைக்கப்படும்.
அண்டை மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் எல்லைகளில் மட்டும் சோதனை நடைபெறும். தேர்தல் நடத்தை விதிகளில் எந்த மாற்றமும் கிடையாது. மேலும் வாக்கு சதவீதம் குறித்து காலை 11 மணியளவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். 2019 மக்களவை தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவான நிலையில் 2024 தேர்தலில் வாக்குப்பதிவு 3% சரிந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களில் 10ல் 4பேர் வாக்களிக்கத் தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.