பொங்கல் பண்டிகை என்றால் எருது விடும் விழா கேள்விப்பட்டுயிருக்கிறோம். சில இடங்களில் மறைமுகமாக கோழி பந்தயம் நடைபெறுகிறது. குதிரை வண்டி ஓட்டும் பந்தயமும் நடைபெறுகிறது. ஆனால் முயல் போட்டி கேள்வி பட்டுள்ளீர்களா?
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்காவில் உள்ளது நல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் பொங்கல் பண்டிகையின்போது குள்ளநரியை ஓடவிடும் விழா நடைபெற்றுவந்துள்ளது. இந்த விழா மக்கள் ஒற்றுமையுடன் வாழவும், விவசாயம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என குள்ளநரியை கோயில் மைதானத்தில் ஓடவிடுவது வழக்கம். இதனை யார் வேண்டுமானாலும் பிடிக்கலாம், அப்படி பிடித்து வந்தால் அவர்களுக்கு கடவுளின் முழு ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இந்த குள்ளநரியை ஓடவிடுவதற்கு முன்பு அதனை அலங்கரித்து ஊர்வலம் அழைத்து வருவார்கள். அப்படி அழைத்து வந்து கோயில் மைதானத்தில் காத்துள்ள பொதுமக்களுக்கு காட்டுவார்கள். பின்பு குழந்தைகளின் தலைமீது குள்ளநரியை வைத்து எடுப்பார்கள். இதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்கள் எதுவும் அண்டாது என்பது அம்மக்களின் நம்பிக்கை. அதன்பின்னர் குள்ளநரியை மைதானத்தில் விடுவார்கள். அதனை பிடிக்க இளைஞர்கள் முட்டி மோதுவார்கள். பிடித்துவிட்டால் பிடித்தவர் அதிஷ்டக்காரராக பார்க்கப்படுவார், கடவுளின் முழு ஆசி அவருக்குள்ளது என்பத நம்பிக்கை
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை குள்ளநரியை இப்படி ஓடவிட்டுள்ளார்கள். அதன்பின் குள்ளநரி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் குள்ளநரிக்கு பதில் முயலுக்கு மாறியுள்ளார்கள். கடந்த 6 ஆண்டுகளாக முயல் போட்டி நடக்கிறது. இதற்காக மார்கழி மாதம்மே ஒரு முயலை வாங்கி அதே ஊரை சேர்ந்த ஒருவரின் வீட்டில் வளர்த்துவந்துள்ளனர் அந்த கிராமத்து மக்கள். காணும் பொங்கலன்று ஜனவரி 17ந்தேதி முயலை அலங்கரித்து டிரக்டரில் கோயில் முன்பு கொண்டு வந்து குழந்தைகளின் தலை மீது வைத்து ஆசி வழங்கவிட்டு மைதானத்தில் விட்டுள்ளனர்.
நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் அதனை பிடிக்க முயல, அனைவருக்கும் போக்குகாட்டிவிட்டு அந்த முயல் அருகில் உள்ள கரும்பு தோட்டத்துக்குள் போய் புகுந்துப்போய்விட்டது.
இந்த விழாவில் நல்லூர் மட்டும்மல்லாமல் சோகத்தூர், தெய்யார், எரமலூர் கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த விழாவை காண வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.