ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் 3 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கைது செய்யப்படக்கூடும் என்பதால், ராஜேந்திரபாலாஜி தலைமறைவானார். இந்நிலையில், ஒரு டி.எஸ்.பி., இரண்டு காவல்துறை ஆய்வாளர் தலைமையில் 8 தனிப்படைகளை அமைத்து அவரை தீவிரமாக மாவட்ட காவல்துறை தேடி வருகிறது.
தொடர்ந்து 15 நாட்களாக அவர் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில் அவர் வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் மாரீஸ் குமார் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளதாக நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் மாரீஸ் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், " ராஜேந்திர பாலாஜி வழக்கில் ஆஜரானார் என்பதற்காக அவர் வீட்டில் காவல்துறை சோதனை நடத்துவது ஏற்புடையது அல்ல, மதுரை மாநகரில் இருக்கும் அவரது வீட்டிற்கு சோழவந்தான் காவல் ஆய்வாளர் சோதனை செய்தது ஏற்புடையது அல்ல" என்று கருத்து தெரிவித்துள்ளார்.