புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தை ஒட்டியுள்ள சுமார் 100 கிராமங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மொய்விருந்து என்னும் விழா நடந்து வருகிறது. இதில்குறைந்தது ரூ 1 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ 6 கோடி வரை மொய் வசூலாகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த மாதம் முதல் மொய் விருந்துகள் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல வடகாடு, மாங்காடு, அணவயல், கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் ஆடி முதல் நாளில் தொடங்கி தினசரி மொய் விருந்துகள் நடக்கிறது. இன்னும் ஆடி மாதம் இறுதி வரை நடத்தப்படும். தஞ்சை மாவட்டத்தில் ஆவணி மாதம் முழுவதும் மொய் விருந்துகள் நடத்தப்படும்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் விவசாயி கிருஷ்ணமூர்த்தி நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிராமண்டமாக மொய்விருந்து நடத்தினார்.
துப்பாக்கி ஏந்திய பாதகாப்பு பணம் எண்ண வங்கி அதிகாரிகளுடன் இயந்திரங்கள் என சேவை மையம் அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரம் கிலோ ஆட்டுக்கறி விருந்து கொடுத்து ரூ 4 கோடி வரை மொய் வாங்கினார். இதுவரை நடந்த மொய் விருந்துகளில் இதுவே அதிகபட்ச மொய் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீட்டிற்குள் நுழைய முயன்ற 4 பேரை வீட்டில் இருந்தவர்கள் பார்த்ததால் தப்பிஓடிவிட்டனர். அதில் ஒரு இளைஞர் மட்டும் அருகில் உள்ள சோளத் தோடத்தில் மறைந்திருந்த போது அப்பகுதி பொதுமக்கள் பிடிபட்டனர்.
அந்த இளைஞர் அருகில் உள்ள அணவயல் கிராமத்தைச் சேர்ந்த சிவநேசன் என்பது தெரிய வந்தது.
விசாரணையில் சிவநேசன் கூறியதாவது.. நான் வெளிநாடு செல்ல கடன் வாங்கி ஏஜன்டிடம் கட்டி ஏமாந்துவிட்டேன். அந்த கடனை கட்ட திருட வந்தேன் என்று கூறியுள்ளார். வடகாடு போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
மொய் பணத்தை திருட வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணமூர்த்தி வீட்டில் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.