Skip to main content

பிரமாண்ட வழுக்கு மரம் ஏறும் போட்டி- பனங்குளம் இளைஞர்கள் வெற்றி

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
vv

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டாலும் ஒவ்வொரு கிராமத்திலும் வழுக்கு மரம் ஏறும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். சுமார் 30 அடி முதல் 40 அடி உயரத்தில் வழுக்கு மரங்கள் தயாரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு புயலால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் இந்த போட்டிகள் நடத்தப்படவில்லை. 


இந்த நிலையில் வடகாடு பரமநகரில் நண்பர்கள் குழு சார்பில்  வழுக்கு மரம் ஏறும்போட்டி நடைபெற்றது. சுமார் 55 அடி உயரமுள்ள மரம் நடப்பட்டு அதன் மீது வழுக்கும் தன்மைக்காக கிரீஸ்,  10 லிட்டர் எண்ணெய் பூசப்பட்டது. மரத்தின் உச்சியில் பண முடிப்பு மற்றும் வாழைப்பழ தார், துண்டு வைக்கப்பட்டு தூக்கி நிறுத்தப்பட்டிருந்தது. இப்போட்டிக்கு வடகாடு, பனங்குளம், பாண்டிக்குடி உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட  அணியினர் முன்பதிவு செய்திருந்தனர் .


     தொடக்கத்தில் தலா 6 பேர் கொண்ட குழுவினர் மரத்தில்  ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டது. சில சுற்றுகளுக்கு பிறகு எண்ணிக்கையை 8 ஆகவும், இறுதியில்  10 பேர் ஏறவும் அனுமதிக்கப்பட்டனர். இளைஞர்கள் ஏறுவதும் சரிவதுமாகவே இருந்தனர். போட்டி தொடங்கி சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு பனங்குளம் அணியினர் ஒருவர் மீது ஒருவராக ஏறி இலக்கை தொட்டு பண முடிப்பை எடுத்தனர்.  இவர்களுக்கு பரிசாக ரூ. 21 ஆயிரத்தி 331 ரொக்கப் பரிசும் சுமார் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன், தமிழக மக்கள் கட்சித் தலைவர் கே.கே.செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி எற்பாடுகளை வடகாடு பரமநகர் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.


            

சார்ந்த செய்திகள்

Next Story

நிலத்தடி நீர் குறித்த ஆய்வுக்கு வந்த டெல்லி அதிகாரிகள்; ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்கு வந்ததாக மக்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 

    இந்தியாவில் நிலத்தடி நீர் குறைந்துள்ள பகுதிகளை கண்டறிந்து மீண்டும் நிலத்தடி நீரை சேமிக்கும் வகையில் ஜல்சக்தி அபியான்  என்ற திட்டத்தின் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

v


தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீரமங்கலம், ஆலங்குடி சுற்றியுள்ள வருவாய் கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் கடந்த காலங்களை விட குறைந்துள்ளதால் எதனால் நிலத்தடி நீர் குறைந்துள்ளது மீண்டும் நிலத்தடி நீரை பூமிக்குள் செலுத்தி எப்படி பாதுகாப்பது என்பது பற்றியும், நிலத்தடி நீரை சேமிக்க அரசுகள் செய்துள்ள பணிகள் குறித்து ஆய்வுகள் செய்ய மத்திய உணவு, பொது விநியோகத்துறை பொருளாதார ஆலோசகர் மற்றும் இணைச் செயலாளர் மணிஷா சென்ஷர்மா,  மத்திய உணவு பொது விநியோகத்துறை துணைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் ஆலிஸ் ரோஸ்லின் டேடே, மத்திய நீர்  வாரிய தொழில்நுட்ப அலுவலர் சந்தியா யாதவ் ஆகியோர் அடங்கிய குழுவினர் வந்துள்ளனர். 

 


வடகாடு சேர்வைகாரன்பட்டி கிராமத்தில் உள்ள மழைத் தண்ணீர் செல்லும் வரத்து வாய்ககால் மற்றும் தடுப்பணை கட்டப்பட்டுள்ளதை மத்திய ஆய்வுக்குழுவினருடன் மாவட்டக் கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதே போல கஜா புயலில் மரங்கள் சாய்ந்ததால் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருவதை பார்வையிட்டனர். தொடர்ந்து லெட்சுமிநரசிம்மபுரம் ஊராட்சியில் உள்ள தடியமனை கிராமத்தில் வடிவழகன் குளத்தில் தேசிய வேலை உறுதி திட்டத்தில் ரூ. 1.65 லட்சத்தில் கட்டப்படுள்ள தடுப்பணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 


இது குறித்து ஆய்வுக்குழுவினர் கூறும் போது.. கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்திருக்கிறது. அதனை மேம்படுத்துவது குறித்து ஆய்வுகள் செய்து வருகிறோம். தற்போது நிலத்தடி நீரை சேமிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தடுப்பணைகளை பார்வையிட்டுள்ளோம். மேலும் ஆய்வுகள் செய்யப்பட்ட பிறகு மேலும் நிலத்தடி நீரை சேமிக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட உள்ளது என்றனர்.

 

    மத்திய ஆய்வுக்குழுவினர் திடீரென வடகாடு, தடியமனை ஆகிய கிராமங்களுக்குள் சென்று ஆங்கிலத்தில் பேசிக் கொண்ட போது அப்பகுதியில் நின்ற சிலர் எதற்காக வந்துள்ளனர் என்பது பற்றி தெரியாமல் ஏதோ புதிய திட்டங்கள் பற்றி ஆய்வு செய்ய வந்துவிட்டதாக கூறி ஆய்வுக்குழுவினரிடம் கேட்டனர். மேலும் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக்காக டெல்லியிலிருந்து குPவினர் வந்துவிட்டனரோ என்று அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பினார்கள். அதன் பிறகு அவர்களுடன் வந்த மாவட்ட அதிகாரிகள் நீர்நிலை பற்றி ஆய்வு என்று விளக்கம் கொடுத்து சமாதானம் செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.
    மேலும் இதுக்கு முன்னால புயலால் பாதிக்கப்பட்ட போது இதே போல மத்திய குழு வந்து பார்த்தார்களே எங்களுக்கு என்ன செஞ்சாங்க. நடப்பு பட்ஜெட்ல கூட எதுவும் அறிவிக்கல. இப்ப நிலத்தடி நீரை சேமிக்க குழு வந்திருக்கு என்ற கேள்வி எழுப்பினார்கள் மக்கள். 
            
 

Next Story

 புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் இரவில் ஆய்வு செய்ததால் விவசாயிகள் அதிருப்தி!

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

 

v


    வடகாடு மற்றும் மாங்காடு பகுதியில் புயல் பாதித்துள்ள பகுதிகளை மத்திய ஆய்வுக்குழுவினர் இரவில் ஆய்வு செய்ததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். 

 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் ஏராளமான கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஆலங்குடி தொகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களும் முழுமையாக பாதிக்கப்பட்டு தென்னை, பலா, தேக்கு, சந்தனம் மற்றும் பல வகையான மரங்களும் வாழை தோட்டங்களும் சேதமடைந்தது. மேலும் பல ஆயிரம் வீடுகளும் சேதமடைந்து பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பள்ளி போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இந்த பாதிப்புகளை பார்வையிட மத்திய ஆய்வுக்குழுவினர் சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை வந்தனர்.

 

இந்த குழுவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு, நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்துறை இயக்குநர் பி.கே.ஸ்ரீவத்சவா, ஊரக வளர்ச்சித்துறை துணைச் செயலாளர் மாணிக் சந்திரா பண்டிட், மின்துறை தலைமைப் பொறியாளர் வந்தனா சிங்கல், நீர்வளத்துறை இயக்குநர் ஜெ.ஹர்ஷா,  நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பாளர் இளவரசன் ஆகிய ஏழு பேர்கள் கொண்ட ஆய்வுக்குழுவினர் வந்திருந்தனர். இவர்களுடன் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,  அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கண்காணிப்பு அலுவலர்கள் சுனில் பாலிவால், சம்பு கல்லோலிகர், மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோரும் ஆய்வுக்குழுவினருடன் சென்று பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

 

    கீரனூர் பகுதியில் மாலையில் ஆய்வு செய்த மத்திய ஆய்வுக்குழுவினர் இரவு 7.30 மணிக்கு பிறகு வடகாடு வடக்குப்பட்டி, கல்லிக்கொல்லை ஆகிய பகுதிகளுக்கு சென்றனர். அப்போது ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன் பாதிப்புகள் குறித்து விளக்கியதுடன் ஆலங்குடி தொகுதியில் அதிகமான பாதிப்புகள் உள்ளதால் ரூ. ஆயிரம் கோடி நிவாரணம் வேண்டும் என்று மனு கொடுத்தார். தொடர்ந்து மாங்காடு சில பகுதியில் ஆய்வு செய்தனர்.


    மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களில் மத்திய குழுவினர் இரவில் ஆய்வு செய்வது என்பது எப்படி சாத்தியமாகும். பாதிப்புகள் எப்படி இரவில் தெரியும். தரைமட்டமாக உடைந்து கிடக்கும் மரங்களை விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் எப்படி கணக்கிட முடியும் என்று அதிருப்தி தெரிவித்தனர்.