பள்ளி மாணவர்களுக்கு படிப்பு, தேர்வு, மதிப்பெண் மட்டுமே போதுமானதில்லை. விளையாட்டு, பேச்சு, கட்டுரை, நடனம், நாட்டியம், பாட்டு, ஓவியம், கைவண்ணம், கலை என அவர்களிடம் ஒளிந்திருக்கும் தனித் திறன்களையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக தமிழக அரசு கலைத் திருவிழாவை நடத்தி வருகிறது.
கடந்த மாதத்தில் ஒவ்வொரு ஒன்றியம், மாவட்ட அளவில் நடந்த கலைப் போட்டிகளில் ஏராளமான அரசுப் பள்ளி கிராமப்புற மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிக்காட்டினார்கள். மாவட்ட அளவில் தேர்வான மாணவ, மாணவிகளுக்குத் தற்போது சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 இடங்களில் மாநில அளவிலான கலைத் திருவிழா நடந்து முடிந்துள்ளது.
இதில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றுள்ளனர். இதில் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி +2 மாணவி அ.சர்மிளா சென்னையில் நடந்த கலைத் திருவிழாவில் மணல் சிற்பம் உருவாக்கும் போட்டியில் கலந்து முதலை உருவத்தை வடிவமைத்து மாநில அளவில் முதல் பரிசு பெற்றுள்ளார். முதல் பரிசு பெற்று சொந்த ஊருக்குத் திரும்பியுள்ள மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) குகன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டி மகிழ்ந்தனர்.
இது குறித்து சாதனை மாணவி சர்மிளா நம்மிடம் பேசும்போது, “தமிழக அரசு மாணவ, மாணவிகளின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரும் வாய்ப்பாக கலைத் திருவிழா நடத்துவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் இருந்தது. ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றபோது மணல் சிற்பம் செய்யலாம் என முடிவெடுத்தேன். இது பற்றி ஆசிரியர்களிடம் சொன்ன பிறகு ஆசிரியைகள் எனக்கு சில நாள் பயிற்சி கொடுத்தாங்க. முதலை சிற்பம் செய்யலாம் என முடிவு செய்து முதல் போட்டியில் தொடங்கி இறுதி போட்டி வரை ஒரே உருவத்தைத்தான் வடிவமைத்தேன். பரிசு கிடைத்திருக்கிறது.
போட்டியில் பங்கேற்க மணல் நானே கொண்டு செல்ல வேண்டும். ஆலங்குடி, புதுக்கோட்டைக்கு கீரமங்கலத்தில் இருந்தே ஆட்டோவில் மணல் மூட்டைகள் கொண்டு போனேன். அதே போல சென்னைக்கும் வீட்டிலிருந்து கொஞ்சம் மணல் மட்டும் எடுத்துக் கொண்டு சென்று சென்னையில் 10 மூட்டை மணல் ரூ.2 ஆயிரத்திற்கு வாங்கி போட்டி நடக்கும் இடத்திற்கு பேருந்தில் ஏற்றினால் ஏற்றக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் ஒரு காரில் மணல் மூட்டைகளை ஏற்றிச் சென்று 28 பேரோடு போட்டியில் கலந்து கொண்டேன். பலர் மணலில் பசை, வண்ணம் கலந்திருந்ததால் அவர்களுக்குப் பரிசு கிடைக்கவில்லை. ஆனால் நான் விதிமுறைகளை முன்பே தெரிந்து கொண்டு மணல் மட்டுமே பயன்படுத்தி முதலை உருவம் வடிவமைத்தேன். என் உருவம் வடிவமைப்பு முடிந்த பிறகு மற்றவர்களின் சிற்பங்களை பார்த்து வியந்தேன். நமக்கு பரிசு கிடைக்குமா என்று நினைத்தேன். ஆனால் முழுமையாக மணல் பயன்படுத்தி வேறு ஏதும் கலக்காமல் செய்ததால் எனக்கே முதல் பரிசு கிடைத்திருப்பது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.
மற்றவர்களும் ரொம்ப அருமையாக வடிவமைத்திருந்தார்கள் ஏதோ சில காரணங்களால் பரிசு கிடைக்காமல் இருந்திருக்கலாம் அதனால் என்னை மன்னித்துவிடுங்கள். ஆனாலும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள் எல்லாருக்குமே நன்றி சொல்லிக்கிறேன். அதே போல ரொம்ப தூர கிராமங்களில் இருந்து வரும் என்னைப் போன்ற போட்டியாளர்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள் கொண்டு வருவது சிரமமாக இருப்பதால் விழா குழுவே மூலப் பொருட்களைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.