கடந்த வாரம் மையம் கொண்ட 'புரெவி' புயல் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டங்களின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கின.
ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி மற்றும் எட்டயபுரம் தாலுகாக்களில் மானாவாரி நிலங்களில் வழக்கம் போன்று பயிரிடப்பட்ட உளுந்து, மிளகாய், மக்காச்சோளம், பாசிப் பயிர் போன்றவைகள் மழைவெள்ளநீர் காரணமாக முற்றிய பருவம் நிலையில், அழுகும் நிலையில் உள்ளன. மேலும், மழை காரணமான நோயினாலும், புழு தாக்கத்தாலும், குறிப்பாக மக்காச் சோளம், வெள்ளைச் சோளம் போன்ற பயிர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டது பாதிக்கப்பட்டதால், கடன்பட்டும், இருக்கும் நகைகளை அடகு வைத்தும் பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.
இந்தப் பாதிப்பை ஈடு செய்வது பயிர் காப்பீடு செய்யப்படுவதுதான் ஒரே தீர்வு. இதனைக் கருத்தில் கொண்ட மாவட்டக் கலெக்டர்களும் விவசாயிகளைப் பயிர் காப்பீடு செய்யும்படி வலியுறுத்தியுள்ளனர். அதற்குத் தேவையான ஆவணமான 10:1 விவசாய அடங்கல் சம்பந்தப்பட்ட ஏரியா வி.ஏ.ஓ.க்களே தரவேண்டும். அங்கேயோ ஆவணம் பெறுவது நாட்கணக்கிலாகிறது.
இது தூத்துக்குடி மாவட்டத்தின் எட்டயபுரம் பகுதியில் விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளதாம். இந்தத் தாலுகாவில் அடங்கிய 56 கிராமங்களின் விவசாயிகள் அடங்கல் ஆவணம் பெறுவதற்குக் காத்துக்கிடக்க வேண்டியநிலை. மேலும் வி.ஏ.ஓ. அலுவலங்களிலோ அடங்கல்மனு தர வேண்டுமானால் நூறு முதல் தகுதியைப் பொறுத்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக் கிளம்புகின்றன.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாய சங்கத் தலைவரான வரதராஜன் கூறுகையில், எட்டயாபுரம் தாலுகாவில் சுமார் மூவாயிரயித்திற்கும் மேற்பட்ட கரிசல் காட்டு விவசாயிகள் உள்ளனர். இந்த வருடம் பயிர்பிடித்து வரும் நிலையில் புழுத்தாக்குதல், கனமழை காரணமாக பயிர் அழுகும் நிலையில் உள்ளன. அதனால் பயிர் காப்பீடு செய்ய இங்கு ஜி.எஸ்.ஜி தரச்சான்று பெற்ற, 7 ஆன்லைன் மையங்களே உள்ளன. அத்தனை விவசாயிகளும் தங்களின் ஆவணங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கு இந்த சென்டருக்குத்தான் செல்ல வேண்டிய நிலை. இதற்காக விவசாயிகள் வேலையை விட்டுவிட்டுக் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. அரசு இதற்கு மாற்றுவழி செய்ய வேண்டும் என்கிறார்.