திருவாரூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட நாயை ஐந்து மணிநேரம் போராடி மீட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் சொந்த செலவில் ஜேசிபியை கொண்டுவந்து மீட்பு பணியில் உதவிய நபருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம் குன்னியூர் பகுதியில் உள்ள 30 அடி ஆழம்கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்றில் சிறிய நாய்க்குட்டி தவறி விழுந்த நிலையில் நாய் குட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். தொடர்ந்து எப்படியும் நாய் குட்டியை மீட்டு விடலாம் என முதலில் கயிற்றில் சுருக்கு போட்டு நாய்க்குட்டியை மீட்க முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் அந்த ஆழ்துளை கிணறுக்கு அருகேயே ஜெசிபி மூலம் குழிதோண்டி நாயை மீட்கலாம் என ஆலோசனை தெரிவித்த நிலையில் நிலத்தின் உரிமையாளரான மூர்த்தி உடனடியாக ஜெசிபியை ஏற்பாடு செய்தார்.
அதன்பிறகு எப்படியும் நாயை மீட்டுவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் ஜெசிபி மூலம் குழி தோண்டப்பட்டது. திட்டத்தின்படியே இறுதியில் நாய் உயிருடன் மீட்கப்பட்டது அங்கிருந்தோரை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அதனையடுத்து நாய்க்குட்டியை மூர்த்தி பெற்றுக்கொண்டார். அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.