
பள்ளிசெல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகளை சரியான முறையில் கணக்கெடுக்கவேண்டும் என்று கள ஆய்வாளர்களுக்கான மீளாய்வுக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா அறிவுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 2018 - 19 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிசெல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணிதொடர்பான கள ஆய்வாளர்களுக்கு மாவட்ட அளவிலான மீளாய்வு கூட்டம் அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட அலுவலகத்தில் 10-04-2018 (செவ்வாய்கிழமை) அன்று மாலையில் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் இரா.வனஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கி அவர் பேசும்போது கூறியதாவது,
இப்பணியில் ஈடுபடும் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள், வட்டாரவளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், மற்றும் சிறப்பாசிரியர்கள் ஆகியோர் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு நேரடியாகச்சென்று அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் முறையாக படிக்கும் மாணவர்களிடம் அப்பகுதியில் பள்ளிசெல்லாகுழந்தைகள், மாற்றுத்திறன்குழந்தைகள் எவரேனும் உள்ளார்களா என விசாரித்தால் உண்மை நிலையினை அறிந்துகொள்ளலாம்.
நீங்கள் களஆய்விற்காக செல்லும் இடங்களில் செங்கல்சூளை தொழிலகங்கள், கல்குவாரிகள், உணவகங்கள், சிற்றுண்டிமையங்கள், இருசக்கர, நான்குசக்கர வாகன பழுதுபார்க்கும் இடங்கள், மளிகைக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பள்ளியை விட்டு இடைநின்ற குழந்தைகள் எவரேனும் குழந்தைத்தொழிலாளர்களாக வேலை செய்கிறார்களா என கள ஆய்வு செய்யவேண்டும். குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கள ஆய்வு அலுவலர்களாகிய நீங்கள் பள்ளிசெல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் எவரும் விடுபடாமல் சரியான முறையில் கணக்கெடுக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் கள ஆய்வின்போது மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் மற்றும் செயல்திட்டம் குறித்து கள ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் க..குணசேகரன், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட உதவித்திட்ட அலுவலர் ஆர்.இரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு கள ஆய்வு குறித்து பேசினார்கள்.
இந்த மீளாய்வுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கே.வீரப்பன், எம்.சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். இந்தக்கூட்டத்தில் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், சம்பந்தப்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் கலந்துகொண்டனர்.