மதுரை மாவட்டத்தில் திருடிய பணத்தில் புது பைக் வாங்கிய சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பொந்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. பழ வியாபாரியான முனுசாமி காலையில் வியாபாரத்திற்குச் சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவார். இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியூர் சென்ற முனுசாமி வீட்டிற்கு வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வீட்டின் கதவு திறந்து கிடந்ததால் அதிர்ச்சியுடன் உள்ளே சென்று பார்த்தபொழுது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 90 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோய் இருந்தது. இது குறித்து காவல்நிலையத்தில் முனுசாமி புகாரளித்தார். இது குறித்து காவல்துறையினர் முதலில் முனுசாமியிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முனுசாமி அண்டை வீட்டாரான சோனை என்பவரது இளைய மகனான 19 வயது வெள்ளைச்சாமி மீது சந்தேகம் இருப்பதாகக் கூறினார். மேலும், சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக சோனை கூறுகிறார். அவரது இளைய மகன் புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன் பின் காவல்துறையினர் வெள்ளைச்சாமியை பிடித்துக் கொண்டு போய் விசாரணை செய்தனர். விசாரணையில், வெள்ளைச்சாமி, அவரது அண்ணன் சேது மற்றும் அவரது நண்பர் கேசவன் ஆகியோர் சேர்ந்து பணத்தைத் திருடியது தெரியவந்தது. திருடிய பணத்தில் 5000 ரூபாயை இருசக்கர வாகனத்திற்கு முன்பணமாகக் கட்டி புது பல்சர் பைக் வாங்கிய வெள்ளைச்சாமியும் அவரது சகோதரரும், அதை கெத்தாக வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ளதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த மீதிப்பணத்தைக் கைப்பற்றி, அவர்களைச் சிறையில் அடைத்தனர்.