Skip to main content

புக்கர் பரிசு போட்டியில் தமிழ் நாவல்; எழுத்தாளர் பெருமாள் முருகன் மகிழ்ச்சி

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

pukar prize nominated perumal murugan pookuzhi tamil novel  

 

இலக்கிய விருதுகளில் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது புக்கர் பரிசு ஆகும். இந்த விருதானது ஆங்கிலத்தில் வெளியாகும் நூல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கான போட்டியில் தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய "பூக்குழி" என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'பைர்' என்ற நாவல் இடம்பெற்று உள்ளது. இந்த நாவல் 2016 ஆம் ஆண்டு வெளியானது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று வீட்டை விட்டு செல்வதைப் பற்றியும், ஆணவக் கொலைகள் பற்றியும் இந்த நாவல் கதைக்களமாக கொண்டு விவரிக்கிறது. இதனை ஆங்கிலத்தில் அனிருதன் வாசுதேவன் மொழிபெயர்த்துள்ளார்.

 

இதுகுறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் முகநூலில், "தமிழ் நாவல் ஒன்று (பூக்குழி) புக்கர் பரிசுக்குரிய நெடும்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்" என்று தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்". 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Sahitya Akademi award announcement for writer Devibharathi!

24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சால்வை மற்றும் செப்புப் பட்டயம் ஆகியவை வழங்கப்படும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெறுவோர் பட்டியல் இன்று (20.12.2023) டெல்லியில் வெளியிடப்பட்டது.

அதன்படி தமிழ் மொழியில் வெளியான ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் 2023 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவலின் ஆசிரியர் எழுத்தாளர் தேவிபாரதி ஆவார். ராஜசேகரன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் தேவிபாரதி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியத்துறையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கான விருது மற்றும் பரிசுத்தொகை வரும் மார்ச் மாதம் 12 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எழுத்தாளர் தேவிபாரதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “2023 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க சாகித்ய அகாடமி விருதை தனது நீர்வழிப் படூஉம் தமிழ் நாவலுக்காக வென்ற பிரபல எழுத்தாளர் ராஜசேகரன் தேவிபாரதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், “தமிழுக்கான இவ்வாண்டின் சாகித்ய அகாடமி விருதை வென்றிருக்கும் எழுத்தாளர் தேவிபாரதியை மனமார வாழ்த்துகிறேன். நாற்பத்து நான்கு ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய உலகில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அவருக்கு இந்த கௌரவம் மிகவும் பொருத்தமானது. தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தின் நுணுக்கமான விவரங்களை, கலாப்பூர்வமாகவும் நுட்பமாகவும் சித்திரிக்கும் இலக்கியப் படைப்புகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் தேவிபாரதி.

சிறுகதைகளில் சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய தேவிபாரதி, நாவல் பக்கம் திரும்பி, அந்த எழுத்திலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நொய்யல் போன்ற நாவல்களில் தன் மக்களின் எழுத்துச் சித்திரத்தை சுவாரசியம் குன்றாமல் வரைந்தார். சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் அவர் எழுதியிருக்கும் புதினமான நீர்வழிப் படூஉம் என்னும் படைப்புக்கு விருது கிடைத்திருப்பது வாழ்த்துக்குரியது” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

Nobel Prize for Literature Announcement

 

2023 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய 2 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு கடந்த 2 ஆம் தேதி அறிவித்திருந்தது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் எம்.ஆர்.என்.ஏ (mRNA) வகை கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த 2 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு நேற்று முன்தினம் (03.10.2023) அறிவித்திருந்தது. அதன்படி அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஃபெரங்க் க்ரவுஸ் மற்றும் ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று (04.10.2023) அறிவிக்கப்பட்டது. அதன்படி வேதியியலுக்கான நோபல் பரிசு மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் இ.புரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ.எகிமோவ் ஆகிய மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்துத் தொகுத்ததற்காக நோபல் பரிசு வழங்குவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, நார்வே நாட்டைச் சேர்ந்த ஜோன் ஃபொஸ்ஸே என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடகம் மற்றும் உரைநடையில் சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக இந்த பரிசு வழங்குவதாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு தேர்வு குழு அறிவித்துள்ளது.