புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சா கடத்தும் கும்பல் வெளி மாவட்டங்களில் விலை உயர்ந்த பைக்குகளை திருடி வந்து சில முறை கடத்தலுக்கு பயன்படுத்திவிட்டு பழைய இரும்பு வியாபாரிகளிடமும், காஸ்ட்லியான பைக் ஓட்ட ஆசைப்படும் இளைஞர்களிடமும் ரூ.10 ஆயிரத்துக்கு விற்றுவிட்டு மீண்டும் வேறு நல்ல பைக்குகளை திருடிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு பெயர் 10 ஆயிரம் ரூபாய் பைக்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் ஒரு பைக் திருட்டுப் போன சம்பவத்தில் அப்பகுதியில் பதிவான சிசிடிவி பதிவில் காணாமல்போன அந்த பைக்கை ஒரு நபர் ஓட்டிச் செல்வது தெளிவாக தெரிகிறது. அந்தப் படம் மாவட்டம் முழுவதும் உள்ள குற்றப்பிரிவு போலிசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அடையாளம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர் பற்றி குற்றப்பிரிவில் உள்ள யாரும் அடையாளம் காண முடியவில்லை.
அதேநேரம் சிவகங்கை மாவட்டத்தில் அதிகமான பைக்குகள் திருட்டுப் போவதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 29ந் தேதி மாலை 3.56 மணிக்கு காணாமல் போன ஒரு பைக்கில் இருவர் செல்லும் சிசிடிவி பதிவை வைத்து அவர்கள் யார் என்பதை கண்டறிய சாக்கோட்டை போலீசார் தீவிரமாக எடுத்த முயற்சி பலன் கொடுத்தது.
புதுக்கோட்டை போலிசாரின் சிசிடிவி பதிவில் சிக்கியிருந்த அதே நபர் தான் சாக்கோட்டை சிசிடிவியிலும் சிக்கி இருந்தார். புதுக்கோட்டை போலீசார் மெத்தனமாக இருந்ததால் பைக் திருடனை கோட்டைவிட்ட நிலையில், சற்று சுதாரித்துக் கொண்ட சாக்கோட்டை போலீசார் சிசிடிவில் சிக்கிய திருடனையும் அவனது நெட்ஒர்க்கையும் கொத்தாக சுருட்டி வளைத்து பிடித்துள்ளனர்.
இரு சிசிடிவி பதிவிலும் சிக்கியிருந்தது புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 70க்கும் மேற்பட்ட பைக்குகளை திருடி விற்று சிக்கிய கொத்தமங்கலம் கண்ணன். கோட்டைப்பட்டினம் சிசிடிவியில் சிக்கியதும் அதே கொத்தமங்கலம் கண்ணனும் கீரமங்கலம் அண்ணாநகர் கணேசனும் தான். புதுக்கோட்டை போலீசார் தங்களின் குற்றப்பட்டியலில் உள்ள நபரை அடையாளம் காண முடியாத நிலையில் சாக்கோட்டை போலீசார் அடையாளம் கண்டு தூக்கி வந்து விசாரித்த போது மேலும் சிலரையும் தூக்கியதுடன் அவர்கள் திருடி விற்ற சுமார் 450 பைக்குகளையும் மீட்டுள்ளனர்.
சாக்கோட்டை போலீசார் தூக்கிய பிறகு இப்போது தான் புதுக்கோட்டை போலீசாருக்கும் நினைவுக்கு வந்துள்ளது நமக்கு அருகில் இருந்த திருடனை கோட்டை விட்டு விட்டோமே என்று. விரைவில் புதுக்கோட்டை போலீசார் மேலும் உள்ள பைக் திருட்டு கும்பலை பிடிக்கத் தீவிரம் காட்டி வருகின்றனர்.