இந்தியாவிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பெரிய கோட்டையாக பொற்பனைக் கோட்டை அமைந்துள்ளது. அந்த கோட்டையை ஆய்வு செய்த ஆய்வாளா் சாந்தலிங்கம் அங்குள்ள செங்கல்களை பார்த்து உறுதி செய்துள்ளார்.
அதேபோல 3,500 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி கண்டெடுக்கப்பட்ட 170 ஏக்கர் பரப்பளவில் பரவிக் கிடக்கும் முதுமக்கள் தாழிகள், நிறைந்துள்ள வில்வன்னி ஆற்றங்கரையில் உள்ள அம்பலத்திடல், திருமயம் அருகில் உள்ள மலையடிப்பட்டியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட கல்பதுக்கைகள், கல்வட்டங்கள் காணப்படுகிறது.
அதேபோல கண்ணனூரில் 3.500 ஆண்டுகள் பழமையான நெடுங்கல் (மென்கிர்) காணப்படுகிறது. அவற்றை பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால உத்தரவும் போட்டுள்ளது. குடுமியான்மலை, திருமயத்தில் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான செங்கோட்டு ஓவியங்கள், மலையடிப்பட்டி பாறைச் கிண்ணங்கள் ( குப்பியூல்ஸ் ) இதையெல்லாம் கடந்து குகை, குடைவரை, கற்றளிகள், நிறைந்துள்ளது.
இதுவரை புதைவிடங்கள் அதிகம் காணப்பட்டாலும் வாழிவிடங்களை இன்னும் யாரும் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி வெளியில் காணப்பட்ட பொருட்களை புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்று புதையல் மறைந்து கிடக்கும் மாவட்டமாக உள்ளது. அதனால் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தொல்லியல் ஆய்வுகள் செய்து தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்று தொல்லியல் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் ஆர்வமுள்ள இளைஞர்களும் மத்திய, மாநில தொல்லியல் துறைக்கு பல வருடங்களாக கோரிக்கை மேல் கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனாலும் அதற்கான உத்தரவு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு விளைநிலங்களாக மாறி வருகிறது.
இந்த நிலையில் தான் பண்டைய தொல்லியல் எச்சங்கள் நிறைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் கள ஆய்வு செய்வதற்கு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அனுமதியை முனைவர் இனியன் (உதவி பேராசிரியர், வரலாறு மற்றும் சுற்றுலாவியல் புலம், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம்) அவர்களால் கோரப்பட்டது.
அதன் அடிப்படையில் முதல்கட்டமாக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அனுமதி அவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக கள ஆய்வு கரோனா நோய் தொற்று வீரியம் குறைந்த பிறகு பல்கலைக்கழக அனுமதி பெற்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாய்வின் மூலம் கண்டுபிடிக்கப் படும் தரமான தொல்லியல் எச்சங்களை வெளிப்படுத்தக்கூடிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த குறிப்பிட்ட இடங்களில் அகழாய்வு செய்வதற்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையிடம் அனுமதி கோரப்படும் என்றும் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் தொன்மை வரலாற்றை இந்த உலகமறிய வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்பதிலும் ஐயமில்லை.
இந்த தகவல் அறிந்து பல வருடங்களாக கோரிக்கை வைத்து காத்திருந்த தொல்லியல் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் முதல்கட்டமாக மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்ய அனுமதி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து அகழாய்வு செய்ய முழுமையான அனுமதி கிடைக்க வேண்டும். அப்போது தான் முழுமையான வரலாற்றை வெளிக் கொண்டுவரமுடியும் என்கின்றனர்.