டெங்கு காய்ச்சல் வந்தபோது அதிலிருந்து மக்கள் தங்களை முன் எச்சரிக்கையாக நிலவேம்பு குடிநீர் குடித்தால் கிருமி தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்று சித்த மருத்துவம் சொன்னதால் ஒவ்வொரு நாளும் அரசு மருத்துவமனைகள் தொடங்கி, பொதுஇடங்கள் என நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. அதனால் மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மேல் அதீத நம்பிக்கை பிறந்தது. இப்போது வரை நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது பரவும் கிருமி, மக்கள் நடமாட்டம் அதிகமானால் அதிகமாக பரவும் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில்தான் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், வாதசுரக்குடிநீர் குடித்தால் கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள முடியும் என்று சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். அதனால் இந்த குடிநீருக்காக மக்கள் அலையத் தொடங்கி உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மருத்துவமனைகளில் மட்டும் கொஞ்சம் இருப்பு உள்ள நிலையில் மற்ற மருத்துவமனைகளில் இருப்பு இல்லை என்று பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்ல வேண்டியுள்ளது.
புதுக்கோட்டை சித்தமருத்துவப் பிரிவில் கடந்த சில நாட்களாக கபசுரக் குடிநீருக்காக பொடிகள் வழங்கப்படுவதை அறிந்து அங்கு நகர மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். இது மாவட்டத்தின் மற்ற பகுதி மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கிடைக்க ஏற்பாடு செய்தால் மக்கள் அச்சமின்றி இருப்பார்கள்.