Skip to main content

பெண்களை வசியம் செய்ய ஆலோசனை சொன்ன பெண் மந்திரவாதி உதவியாளருடன் கைது!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி வித்யா என்ற சிறுமி குடிதண்ணீர் எடுக்கக் குளத்திற்குச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. பின்னர் அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். சுமார் அரை கி.மீ. தூரத்தில் கழுத்து நெறிக்கப்பட்டு வாய்ப் பேச முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அவரது தாயார் இந்திரா மற்றும் சகோதரிகள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரழந்தார். 
 


சிறுமியைக் கொன்றவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று மாதர் சங்கம் போராட்டம் அறிவித்தது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுமுகம் மற்றும் பா.ஜ.க.வினர் அவர்களின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் சொன்னதுடன் கொலையாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வந்தனர். அப்போது சந்தேகப்பட்ட 6 இளைஞர்களை போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து சிறுமியின் தந்தை பன்னீர் நடந்து கொண்ட விதம் போலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் தாய் இந்திரா போலிசார் விசாரனையில் சிறுமி அடிப்பட்டு கிடந்த இடத்தைக் கணவர் பன்னீர் தான் எங்களிடம் சொன்னார் என்று கூறியதால் மேலும் சந்தேகம் வலுக்க பன்னீரை பிடித்த போலிசார் கவணித்து விசாரித்தனர். 
 

 


அப்போது தான் திடீர் பணக்காரன் ஆக தனக்கு முன்பே பழக்கமான புதுக்கோட்டை மாலையிடு மந்திரவாதி வசந்தியின் ஆலோசனைப்படி பூஜைகள் செய்து பிறகு, மகளை தான் மற்றும் தன் இரண்டாவது மனைவி மூக்காயி அவரது உறவினர் குமார் ஆகியோர் கழுத்தை நெறித்து கொன்றோம். மறு நாளும் பூஜை செய்தோம் பூஜைக்கு உதவியாக தனது முன்னாள் சித்தாள் முருகாயி இருந்தார். திடீர் பணக்காரன் என்பது ஒரு பக்கம் மற்றொன்று எனக்குப் பெண்கள் மீதான ஆசை அதிகம் அதனால் மகளைக் கொன்று பூஜை செய்தால் மேலும் பெண்களை வசியம் செய்து எனது ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றதால் பெற்ற மகளைக் கொன்றோம் என்று கூறியுள்ளார். போலிசார் பன்னீரை பிடித்து விசாரனை செய்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி இரண்டாவது மனைவி மூக்காயி மர்மமாக இற்ந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பன்னீர் மற்றும் குமாரை கைது செய்த போலிசார் அவர்களின் வாக்குமூலத்தின்படி பெண் மந்திரவாதி வசந்தி மற்றும் உதவியாளர் முருகாயி ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கில் சம்மந்தப்பட்டவர்களைத் துரிதமாகப் பிடித்த தனிப்படை போலிசாரை எஸ்.பி. அருண்சக்திகுமார் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

 


 

சார்ந்த செய்திகள்