கடந்த 19 ஆம் தேதி புதுக்கோட்டை, கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீனவர்களின் விசைப்படகு மீது மோதியது. இந்த சம்பவத்தில் மீனவர்கள் சுகந்திரன், சேவியர் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், கடலில் மூழ்கிய ராஜ்கிரண் என்ற மீனவரைக் காணவில்லை. பலமணிநேர தேடலுக்குப் பின் மீனவர் ராஜ்கிரணின் உடல் நடுக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. மீனவர்கள் சுகந்திரன், சேவியர் ஆகியோருடன் கைப்பற்றப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடலை இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தகவல் வெளியாகியது.
இதனையடுத்து மீனவர்கள் உண்ணாவிரதம், சாலைமறியல் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகப் புதுக்கோட்டை மீனவர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். கோட்டைபட்டினத்தில் உள்ள மீனவர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்களும் கலந்துகொண்டுள்ளனர். மீனவர் ராஜ்கிரண் உடலை ஒப்படைக்கும் வரை மீனவர்களின் இந்த போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.