மத்திய, தென் தமிழகத்தில் உள்ள ரவுடிகள், கூலிப்படையினரின் பதுங்குகுழியாக உள்ளது புதுக்கோட்டை. வெவ்வேறு இடங்களில் சம்பவம் செய்துவிட்டு திருச்சியில் தஞ்சமடைந்த ரவுடிகளுக்கு திருச்சி போலிசார் கிடுக்குப்பிடி போட தற்போது புதுக்கோட்டையில் வந்து தஞ்சமடைகின்றனர். இப்படி வந்த பலரைப் புதுக்கோட்டை எஸ்.பி. வந்திதா பாண்டேயின் அதிரடியால் தட்டித் தூக்கப்படுகின்றனர். அந்த வகையில் தான் கடந்த வாரம் நெடுவாசலில் பதுங்கி இருந்த 4 காவல்நிலைய பதிவேடு குற்றப்பட்டியலில் உள்ள ரவுடிகளையும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரையும் தனிப்படை போலீசார் தூக்கினர். அதில் பாலு என்கிற பாலமுத்து வடகாட்டில் தப்பி ஓடும் போது கால் முறிந்தது.
இந்த சம்பவம் முடிந்த சில நாட்களில் புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் பழைய பகையில் ஒருவரைத் தீர்த்துக்கட்ட நினைத்த அரசியல்கட்சி பிரமுகர் தனக்குச் சாதகமான கூலிப்படையைத் தேடிக் கொண்டிருந்த போது தஞ்சை ரவுடிகள் குஜிலி ராஜா மற்றும் லோடு முருகன் ஆகியோருடன் மச்சுவாடி நபர் சிறையில் இருந்த போது பகை ஏற்பட்டதால் சிறை மீண்டதை தெரிந்துக் கொண்ட அரசியல் பிரமுகர், ’என் பகையாளி தான் உன் பகையாளி வேலையை முடித்து விடு’ என்று சொல்லியுள்ளார். இதற்குச் சம்மதித்த தஞ்சை ரவுடிகள் மச்சுவாடி நபரைச் சம்பவம் செய்ய 15 நாட்களுக்கு முன்பே மச்சுவாடி வந்து தங்கி ஸ்கெட்ஜ் போட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த தகவல் உளவுத்துறை மூலம் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே கவனத்திற்குச் சென்ற உடனே தனிப்படை களமிறக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு மச்சுவாடிப் பகுதியில் குஜிலி ராஜாவைத் தூக்கிய போது போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயன்று கால் முறிந்தது. கால் முறிந்த குஜிலி ராஜா மீது வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த குஜிலி ராஜா மீது ஏற்கனவே இளவரசன் கொலை வழக்கு உள்படப் பல வழக்குகள் உள்ளதாகக் கூறுகின்றனர் போலீசார். தீவிர வேட்டையால் ஒரு சம்பவம் தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
மேலும், குஜிலி ராஜாவுடன் தங்கியிருந்த லோடு முருகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விரைவில் அவரும் பிடிபடலாம் என்கின்றனர். ரவுடி குஜிலி ராஜா கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும் இவர்களை அழைத்து வந்து தங்க வைத்திருந்த அரசியல் பிரமுகர் திடுக்கிட்டதோடு ஆளுங்கட்சி மாநகர நிர்வாகி ஒருவரைச் சந்தித்து குஜிலி ராஜா வாக்குமூலத்தில் தன் பெயரைச் சேர்த்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பும் கேட்டுள்ளாராம். புதுக்கோட்டையில் தொடரும் ரவுடிகள் வேட்டை இன்னும் தொடர வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.