12 வயது சிறுமியை சிலர் மரத்தில் கட்டி வைத்து அடித்த நெஞ்சைப் பிளக்கும் கொடூர சம்பவம் மனம் கலங்கச் செய்துள்ளது. இப்படி ஒரு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்திருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமம். நவம்பர் 10ஆம் தேதி மதியம் 12 வயது ஒரு சிறுமி டீ கடைக்கு டீ வாங்க வந்தபோது, அங்கு நின்ற சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி, அந்தச் சிறுமியைப் பலர் முன்னிலையில் ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். அந்தச் சிறுமியின் கதறல் சத்தம் கல்நெஞ்சம் கொண்டோரையும் கரையவைத்துவிடும். ஏனோ சுற்றி நின்றவர்கள் கண்டுகொள்ளவில்லை.
சிறுமி மரத்தில் கட்டிவைத்து தாக்கப்படுகிறார் என்ற தகவல் அறிந்து கீரமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது மரத்தில் கட்டப்பட்ட நிலையில் அழுதுகொண்டிருந்தார் அந்தச் சிறுமி. வேகமாக கட்டுகளை அவிழ்த்த காவல்துறையினரிடம், "நான் கூலி வேலை செஞ்சு என் மகன் படிப்புக்காக வாங்கிய செல்ஃபோனை இந்தப் புள்ள திருடிட்டா. அதனாலதான் கட்டி வச்சேன்" என்று அந்தப் பெண் அச்சமின்றி காவல்துறையினரிடம் கூறியுள்ளார். மேலும் காவல்துறையினரிடம் பருப்பு, எண்ணெய், எலுமிச்சை, தேங்காய்களையும் எடுத்துச் சென்றுவிடுவதாக சிறுமி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
அந்தச் சிறுமியின் அழுகையை நிறுத்தி விசாரித்தபோது, “பசிக்குப் புரோட்டா வாங்கித் திங்க செல்ஃபோனை எடுத்தேன். எங்க வீட்லதான் இருக்கு” என்று சொல்லிக்கொண்டே உதட்டில் வடிந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டார். சிறுமியின் வீட்டில் இருந்த செல்ஃபோனை காவல்துறையினர் கைப்பற்றினர்.
ஏன் இப்படி நடந்தது?
சிறுமியின் பெற்றோர் சின்ன கீற்றுக் கொட்டகையில் குழந்தைகளுடன் தங்கி கூலி வேலை செய்கிறார்கள். கஜா புயலில் பாதி கொட்டகை சேதமடைந்துவிட்டது. கரோனாவால் கட்டட வேலை இல்லாமல் தந்தை வீட்டில் இருக்கிறார். தாய் தினசரி கூலி வேலைக்குப் போனால்தான் சாப்பாடு. சில வருடங்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை மீது திருட்டு வழக்குப் பதிவாகி சிறைக்குச் சென்று வந்தவர்தான் என்றாலும் சிறுமி உணவுக்காகவும், பசிக்காகவும் செல்ஃபோனை எடுத்திருக்கிறாள். அடுத்த வீட்டில் செல்ஃபோனை எடுத்தது தவறுதான். அதற்காக பலபேர் வந்து போகும் கடையின் முன்பு மரத்தில் கட்டி வைத்து அடித்தது யாராலும் ஏற்கமுடியாத செயல். சிறுமி வீடு அருகில்தான் என்பதால் வீட்டில் வைத்தே கண்டித்திருக்கலாம் என்கின்றனர். இதுகுறித்து கீரமங்கலம் காவல்துறையினரும், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பசிக்கொடுமை ஒரு சிறுமியை கூட அடுத்தவர் பொருள் மீது கை வைக்க வைத்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கும் அவர் குடும்பத்திற்கும் தேவையான சிறு உதவியை அரசாங்கம் செய்து கொடுத்தால் அந்தச் சிறுமி குடும்பம் நிம்மதியாக வாழ வழி கிடைக்கும்; இதுபோன்ற கொடூரங்களில் சிக்காமல் இருப்பார்கள்.