புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் நீர் நிலைகளை உயர்த்த கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் சொந்த செலவில் 60 நாட்களுக்கு மேல் குளங்கள், ஏரிகள் நீர் வரத்து வாய்க்கால்கள், அணைக்கட்டுகளை சீரமைத்து வருகின்றனர். இந்த நிலையில் நீர்நிலை ஆய்வுக்காக டெல்லியிலிருந்து கீரமங்கலம் பகுதிக்கு வந்துள்ள மத்திய ஆய்வுக்குழுவினர் கொத்தமங்கலத்தில் இளைஞர்கள் சீரமைத்துள்ள குளங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது இளைஞர்களின் பணிகளைப் பார்த்து பாராட்டினார்கள் ஆய்வுக்குழுவினர். அதே சமயம் இளைஞர்கள் நீர் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்துத் தர வேண்டும், இன்னும் பல குளங்கள் சீரமைக்க அரசு உதவிகள் செய்ய வேண்டும், குளம், குளத்தின் கரைகளில் இளைஞர்கள் நட்டுள்ள மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி பராமரிக்க 100 நாள் பணியாளர்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். மனுக்களை வாங்கி பார்த்த ஆய்வுக்குழுவினர் உடனடியாக அய்யனார் கோயில் குளத்தை உடனடியாக சீரமைக்கவும், பிடாயம்மன் கோயில் பெரிய குளத்திற்குள் உள்ள சிறிய குளம் தூர்வாரவும் நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகள் தொடங்கும் என்று உறுதி அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கொத்தமங்கலம் மேற்கு கிராமத்தில் வீரமணி என்ற விவசாயி தனது வீட்டின் மேல்கூறையில் விழும் மழைத் தண்ணீரை ஒரு துளி வீணாகாமல் குழாய்கள் மூலம் பழைய கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் சேமித்து குடி தண்ணீருக்காகவும், மரங்கள் வளர்க்கவும் பயன்படுத்தி வருவதை முதன் முதலில் நக்கீரன் இணையத்தில் செய்தியாக வெளிக்கொண்டு வந்தோம். இதனையடுத்து தற்போது ஆய்வுக்கு வந்த மத்திய குழுவினர் மழை நீர் சேகரிக்கப்படும் விவசாயி வீரமணி வீட்டிற்குச் சென்று மழை நீர் சேகரிப்பு திட்டம் பற்றி ஆய்வு செய்ததுடன் விளக்கம் கேட்டறிந்தனர். அவரது மழைநீர் சேகரிப்பு பணி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறி விவசாயி வீரமணியை பாராட்டினார்கள்.