புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி பிரதானச் சாலையில் மதுப்பிரியர்கள் வைத்துள்ள பதாகை அனைவரையும் சிரிக்கமட்டுமல்ல சிந்திக்கவும் தூண்டுகிறது.
அந்தப் பதாகையில்.. 'சரிதானுங்ளே..!' என்ற தலைப்பில் கவிஞர் செரியலூர் எஸ்.பி.செல்வம் முகநூலில் எழுதியதிலிருந்து.. என்று தொடங்குகிறது அந்தப் பதாகை.
திட்டமிட்டபடி சட்டமன்றத் தேர்தல் ஊக்கமுடன் ஊட்டமுடன் நடந்து புடிஞ்சுடுச்சு..
மதம் சார்ந்த கூட்டணியோ?
மதம் சேராத கூட்டணியோ?
ஆட்சியப்புடிச்சு காட்சி தரப் போறீங்க.. தப்பில்லை!
இதுக்கு முன்னே நீங்க தந்த நல்லாட்சிக்கு நாங்களும் நல்லாவே உதவியிருக்கோம்.. அப்படியே கீழே பாருங்களேன்.. என்று கடந்த 2002-2003 முதல் 2018-2019 வரை மதுவால் அரசுக்கு வந்த வருமானப் பட்டியல் அச்சிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இனிம் ஒதவுவோம்.. மறுக்கமாட்டிங்க..
வீட்டு வருமானம் நொடமானாலும் நாட்டு வருமானத்துக்கு தெடமாருக்குறோம்!
ஆனா? சனங்க எங்கள தண்ணி போட்ற கூட்டமாவும் ஒங்கள தண்ணி காட்டற கூட்டமாவும் நெனக்கிறாக சாமியோவ்..
இப்ப நாங்க எதிர்பாக்குறது எங்க அயிட்டத்தையும் வாரத்துல 2 நாள் இலவசமா தந்திங்கன்னா எங்களுக்கும் கொஞ்சம் ஒதவியா இருக்கும்.. சரிதானுங்களே..! என்று அந்தப் பதாகை முடிகிறது.
ஊருக்கு ஊரு குடிமகன்கள் குடித்துக் குடித்து மடிந்து போகும் போதெல்லாம் தாலியைப் பறிகொடுத்த பெண்களின் கதறலில் கேட்கும் டாஸ்மாக்கை மூடு என்று சொல்லும் வார்த்தைகள் ஆண்ட அரசுக்குக் கேட்கவில்லை. நாட்டு மக்களைவிட வருமானத்தையே பெரிதாகப் பார்த்தனர். இதனால், குடியால் கெட்ட குடிகள் ஏராளம். இவற்றை சுட்டிக்காட்டி இனிமேல் வரும் புது அரசாங்கம் டாஸ்மாக்கை மூடி பெண்களின் கழுத்தில் தொங்கும் தாலிக்குப் பாதுகாப்பு கொடுங்கள் என்று கேட்பதாகவே பார்க்க முடிகிறது.
தமிழ்நாட்டில் அமையப் போகும் புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறதோ?