தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் இரவுப் போராட்டங்கள் வேகமாக பரவி வருகிறது. அதிலும் சென்னையில் தடியடி சம்பவம் நடந்ததால் மீண்டும் போராட்டம் வேகமெடுத்துள்ளது.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அனைத்து உலமாக்கள், ஜமா அத்தார்கள், மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் அரசு ஹாஜி அமானுல்லாஹ. இம்தாதி தலைமையில் புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில்.. மத்திய அரசு கொண்டுவந்துள்ள சி.ஏ.ஏ, என்ஆர்சி, புதுப்பிக்கப்பட்ட என்.பி.ஆர் போன்ற சட்டங்கள் பொதுமக்களையும், இஸ்லாமியர்களையும் கடுமையாக பாதிக்கும் என்பதை தாங்கள் அறிந்ததே!
இந்த சட்டங்களுக்கு எதிராக இந்தியாவில் பல மாநில சட்டமன்றங்களில்இதற்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதைப் போன்று தமிழ்நாட்டிலும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மனு குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தததுடன் சட்டமன்றம் நடக்கும் நாட்களில் முதலமைச்சரை நேரில் சந்திக்க ஏற்பாடுகள் செய்வதாகவும் உறுதி அளித்துள்ளார். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள இஸ்லாமிய அமைப்புகளை அழைத்து கலந்து பேசி விரைவில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்று முதலமைச்சரை சந்தித்து திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக் கோரி சட்டமத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி மனு கொடுத்து வலியுறுத்துவோம் என்றனர் அமைச்சரிடம் மனு கொடுக்கச் சென்ற நிர்வாகிகள். சில நாட்களுக்குள் முதலமைச்சருடன் புதுக்கோட்டை மாவட்ட இஸ்லாமிய அமைப்புகள் சந்திப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.