விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் மின்பற்றாக்குறையால் ஏராளமான மின்மாற்றிகளும் பழுதடைந்துள்ளதால் பயிர்கள் கருகி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 40 மின்மாற்றிகள் பழுதடைந்து மாற்ற முடியாமல் உள்ளது. இந்தநிலையில் தான் விவசாயத்திற்கான மின் மோட்டார்கள் இயக்கும் போது மின்மாற்றிகளில் அடிக்கடி பியூஸ் போய்விடுகிறது. இப்படித்தான் அறந்தாங்கி அருகில் உள்ள திருநாளூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெய்சங்கர் (திமுக) தனது ஆழ்குழாய் கிணறுக்கு மின்சாரம் வரவில்லை என்று மின்மாற்றியில் ஏறி பியூஸ் போட முயன்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆனால் அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கூறிவருகின்றனர். இது சம்மந்தமாக அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இப்படி அடிக்கடி மின்மாற்றிகள் பழுதாவதால் பலர் மின் விபத்தில் சிக்கி வருகின்றனர்.