கரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள ஊரடங்கு மட்டுமே சிறந்த மருந்து என்று, மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாட்களில் அதிகமாக பாதிக்கப்படுவது விவசாயிகள், கூலி தொழிலாளிகள், சிறு, குறு வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும்தான்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், தொடக்கத்தில் இருந்தே விவசாயிகளின் விளை பொருட்களை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்ல சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், கூட்டுறவு சங்கம் மூலம் காய்கறிகளை கொள்முதல் செய்து, பொதுமக்களிடம் குறைந்த விலைக்கும் விற்பனை செய்ய உத்தரவிட்டார்.
ஆனாலும் கீரமங்கலம், வடகாடு உள்ளிட்ட கிராமங்களில் அதிகம் விளையும் பலா, வாழை, போன்ற பழங்கள் விற்பனை செய்ய முடியாமல், தோட்டங்களிலேயே பழமாகி வீணாகி வருவதைத் தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், வேளாண்மை விற்பனை குழு, மற்றும் தோட்டக்கலை துறை மூலம் காய், பழங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு, வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்ல அனுமதி சீட்டுகளையும் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில், திடீரென வடகாடு கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மலர் விவசாயிகள் எங்களுக்கு குளிர்பதன கிடங்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆலங்குடி குளிர்பதனக்கிடங்கை பயன்படுத்திக் கொள்ளலாம் வாடகை இல்லை என்று ஆட்சியர் கூறினார். தொடர்ந்து விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவில்லை. இடைத்தரகர்கள் மூலம் விலை குறைக்கப்படுகிறது என்று கேள்வி எழுந்தபோது.. இடைத்தரகர்களை கட்டுப்படுத்தி கட்டுபடியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து புதுக்கோட்டை – தஞ்சை மாவட்ட எல்லையான புளிச்சங்காடு கைகாட்டி சோதனைச் சாவடிக்கு சென்று ஆய்வு செய்தபோது, அந்த வழியாக வந்த விவசாய விளை பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களின் ஓட்டுநர்கள் முககவசம் இல்லாமல் வந்ததைப் பார்த்து, சோதனைச் சாவடியில் முககவசம் இல்லாமல் வரும் ஓட்டுநர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார். தொடர்ந்து மாவட்ட எல்லை கண்காணிக்கப்பட்டு தேவையான அனுமதியுடன் வருபவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து கரோனா இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டையை தக்க வைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு அனைத்து துறையினரும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். அதேபோல மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.