
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதிக்கு உட்பட்டது இறையூர் கிராமம். இந்த பகுதியில் உள்ள பட்டியலினத்தோர் காலனியில், சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும், இந்த கிராம மக்கள், நீண்ட காலமாக குடிநீர் வசதியில்லாமல், தவித்து வந்த நிலையில், அவர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு, கடந்த 2016 ஆம் ஆண்டு, வேங்கை வயல் பகுதியில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.
மேலும், இதை பொறுத்துக்கொள்ள முடியாத சில சாதி வெறியர்கள் அந்த குடிநீர் டேங்கில் மலத்தை கலந்துள்ளனர். இதனால், இறையூர் கிராம மக்களுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் கொடுத்த புகாரின்பேரில் வெள்ளனூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் பட்டியலின மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது, "எங்க ஊருக்குள்ள இருக்கிற அய்யனார் கோவில்ல, எங்களால சாமி கும்பிட முடியாது. நாங்க பட்டியலின சமூகத்தை சேர்ந்ததுனால, எங்கள கோவிலுக்குள்ள அனுமதிக்க மாட்டாங்க. இதுவரைக்கும் நாங்க யாரும் கோவிலுக்கு போனதில்ல” என கண்ணீர் மல்க கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி, மாற்று சாதியினர் வைத்திருக்கும் டீ கடைகளில், இரட்டை குவளை முறையில் தீண்டாமை கடைபிடிப்பதாகவும் புகார் எழுந்தது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட கலெக்டர் கவிதா, பட்டியலின மக்களை தன் கையோடு அழைத்துக்கொண்டு ஊர் கோவிலுக்கு சென்றார். கோயில் பூட்டிக் கிடந்த நிலையில் பூசாரியை வரவைத்து கோயிலைத் திறந்து மக்களோடு மக்களாக மாவட்ட ஆட்சியரும் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்தார். இதனால் விரக்தியடைந்த பூசாரியின் மனைவி சிங்கம்மாள் தனக்கு சாமி வந்தது போல், நாடகமாடி பட்டியலின மக்களை இழிவாக பேசியதாக சொல்லப்படுகிறது.
இதை அமைதியாக கவனித்துக்கொண்டிருந்த மாவட்ட கலெக்டர் கவிதா சாமியாடி ஆபாசமாக பேசிய பூசாரி மனைவி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதேபோல இரட்டைக்குவளை முறையை கடைபிடித்த கடை உரிமையாளர் மூக்கையா, அவரது மனைவி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, டீக்கடை உரிமையாளர் மூக்கையாவையும், சிங்கம்மாளையும் கைதுசெய்த போலீசார், அவர்களை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, இரட்டைக் குவளை அமலில் இருக்கும் டீ கடைக்கு விசாரணைக்காக சென்றிருந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவுக்கு அவரது பாதுகாவலர் ஒரு குடை பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். மழை மெதுவாக தூறல் போட்டுக்கொண்டிருந்தது. இதைக் கவனித்த ஆட்சியர் கவிதா ராமு, எனக்கு குடை வேண்டாம் என முதலில் சைகை மொழியில் கூறினார். அதை அந்த பாதுகாப்பு காவலர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, ஆட்சியர் கவிதா ராமு.. வேண்டாம்ப்பா.. எனக்கு குடை வேணாம்.. இந்த மழை எனக்கு புடிச்சிருக்கு.. எனச் சொல்ல அந்த இடமே சிரிப்பு சாரலில் சில்லிட்டது.