புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியம் சிறுமருதூர் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசும் போது, “ஒரு பெண்ணாக நீங்கள் மகளாக, மனைவியாக, தாயாக என பல்வேறு அவதாரம் எடுக்குறீங்க. வேலை செய்றது யாரு பெண் தான். நான் பெண்ணாக இருப்பதால் பாசமாகச் சொல்வேன். புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரைப் பெண்கள் வேண்டாம் என்ற மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. நிறையப் பெண்களுடைய பேரைப் பார்த்தாலே ‘போதும்பொண்ணு’ என்று வைத்திருக்கிறார்கள் அது ஏனென்று தெரியவில்லை. இந்த நிலை மாற வேண்டும்.
இந்த இடத்தில் உட்கார்ந்து பாருங்கள் மாவட்ட ஆட்சியர் யார்?. ஒரு பெண் தான். படித்தால் தான் இது போன்ற சூழ்நிலைக்கு வரலாம். அதனால் தான் சொல்றேன் இனிமேல் போதும் பொண்ணு என்று நினைக்காதீர்கள். பெண்கள் தான் நமக்கு வயதான பிறகு சாப்பாடு போட்டு பாத்துக்குவாங்க. ஆண், பெண் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். அதற்கு அரசாங்கம் எல்லாமே செய்கிறது. வறுமை, வேலைக்குத் தள்ளும். அது ஒரு தற்காலிக வருமானம் தான் ஆனால் படித்தால் மட்டும் தான் பெரிய ஆளாக முடியும். வாழ்க்கைத் தரம் உயரப் படிக்க வேண்டும்.
அதே போலப் பெண்களுக்கு அதிகமாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் அதிகம் வருகிறது. அதற்கு நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வேண்டும். இந்த கிராமம் நெகிழி இல்லாத கிராமமாக மாற வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம் தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பனை விதைப்புத் திட்டத்தில் நம் புதுக்கோட்டை மாவட்டம் இதுவரை 7.5 லட்சம் பனை விதைகள் விதைத்து முன்னால் இருக்கிறோம் என்பது பெருமையாக உள்ளது” என்றார்.