சென்னை பசுமைவழிச் சாலையில் பெண்கள் விடுதியில் நுழைந்த மர்ம நபர் 80 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியதோடு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்கள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பசுமைவழி சாலையில் செவிலியர்களுக்கான தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சுமார் 50 பெண் செவிலியர்கள் தங்கியிருக்கின்றனர். மூன்று தளங்களாக உள்ள இந்த பெண்கள் விடுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு நுழைந்த மர்ம நபர் ஒருவர் மூன்றாவது மாடிக்கு சென்றுள்ளார். கேட்டை திறந்து உள்ளே படிக்கட்டுகள் வழியாக மேலே செல்வது வரை அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது.
மூன்றாவது தளத்தில் காற்றோட்டத்திற்காக கதவைத் திறந்து வைத்து நான்கு இளம் பெண்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்படி உறங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் பாலியல் சீண்டலில் அந்த மர்ம நபர் ஈடுபட்டுள்ளது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. தூக்கத்தில் இருந்த பெண்கள் பக்கத்தில் இருக்கும் சக தோழிகள் கைதான் மேலேப்படுகிறது என நினைத்த தருணத்தில் அந்த நபர் தொடர்ந்து அந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான். அதேபோல் அந்த அறையில் பெண் ஒருவர் வைத்திருந்த கைப்பையில் இருந்த 80 ஆயிரம் ரூபாயை கைபையோடு தூக்கி சென்றுள்ளான். இந்நிலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த பெண்கள் மர்ம நபர் ஓடுவதை பார்த்து அதிர்ந்து அச்சத்தில் கத்தியுள்ளனர்.
அனைவரும் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டான். இதனையடுத்து விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அந்த மர்ம நபர் யார் என்று பார்த்தபோது அது அதேபகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சரத்குமார் என்பது தெரியவந்தது. அவனது தாய் அதே விடுதியில் பணிபுரிந்ததால் அவரை அழைத்து வந்து உங்கள் மகன் செய்திருக்கும் வேலையை பார்த்தீர்களா என அந்த பெண்கள் முறையிட்டனர். இதையடுத்து இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அபிராமபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு சரத்குமாரை தேட ஆரம்பித்தனர்.
தப்பிச் சென்ற கல்லூரி மாணவன் எதிரில் ரோந்து போலீசார் வாகனத்தை பார்த்ததும் பசுமை வழிச்சாலையின் நடைபாதையில் படுத்து உறங்குவது போல் நடித்துள்ளான். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே அந்த நபரை பிடித்து விசாரித்ததில் உண்மை தெரிய வந்தது. அவனிடம் இருந்து 80 ஆயிரம் ரூபாயையும், கைப்பையையும் போலீசார் கைப்பற்றி சரத்குமாரை கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பசுமைவழிச் சாலை ஏரியா என்பது முக்கிய தலைவர்கள், நீதிபதிகள் குடியிருக்கும் பகுதி ஆகும், இதனால் அந்த பகுதியில் எப்போதும் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு என்பது இருந்து கொண்டே இருக்கும். இந்த சூழலில் அந்த பகுதியில் தனியார் பெண்கள் விடுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அங்கு எப்படியாப்பட்ட பாதுகாப்பு சூழல் நிலவுகிறது என்பதற்கு ஒரு சான்று ஆகவே இருக்கிறது.