கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள சிவன் கோவிலுக்கு சொந்தமான குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக சிவனடியார்களும், பொதுமக்களும் திட்டக்குடி தாசில்தாருக்கு புகார் கொடுத்திருந்தனர்.
இதையடுத்து சிவன் கோவிலுக்கு சொந்தமான குளத்தை ஆக்கிரமித்த கட்டிடங்களை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இடிக்கும் பணிகளை வருவாய் துறை மூலம் கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கப்பட்டது.
தாசில்தார் சத்யன் மற்றும் அதிகாரிகள் காவல்துறை உதவியோடு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
குளம் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு பகுதி, தெற்கு பகுதி மற்றும் மேற்கு பகுதிகளில் அகற்றும் பணிகள் முடிவடைந்துள்ளது.
ஆனால் வடக்கு கரை பகுதியில் மட்டும் பணிகள் மந்த கதியில் நடந்தன. அதற்கு காரணம், அதிமுக பிரமுகர்களின் வீடுகள் அங்கு இருந்ததால் அதிகாரிகள் பணியில் மெத்தனம் காட்டியதாக சிவபக்தர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் திட்டக்குடி தாசில்தார் சத்யன் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் புதிய தாசில்தார் வந்து பணி ஏற்காததால், சத்யன் இன்னும் திட்டக்குடி தாசில்தாராக உள்ளார்.
ஆகையால் இன்று ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது, ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களிடம் இருந்து தாசில்தார் சத்யன் செல்போனுக்கு தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.
ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை கைவிடுமாறு தொந்தரவு செய்ததால், தனது செல்போனை தூக்கிப்போட்டு உடைத்தார். இருப்பினும் ஆளும் கட்சியினர் அவருடன் வந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு சத்யனை தொந்தரவு செய்துள்ளனர்.
இதில் கோவப்பட்ட தாசில்தார் சத்யன், வரும் 22ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் அவர்களாகவே காலி செய்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டு புறப்பட்டார்.
இந்த நிலையில் பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றாததை கண்டித்து இன்று திட்டக்குடி பஸ் நிலையம் முன்பு திடீரென்று விநாயகர் - சிவபெருமான் வேடமணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட சிவனடியார்களும் கலந்து கொண்டனர்.
மேலும், ஆக்கிரமிப்புகளை எடுக்கும் பணியில் தீவிரமாக இருந்தார் தாசில்தார் சத்யன். அவரை ஆளும் கட்சியினர் வேண்டுமென்றே இடமாற்றம் செய்து விட்டனர். அவரை இடமாற்றம் செய்யக் கூடாது என்று விருத்தாசலம் ஆர்.டி.ஓ. சந்தோஷினி சந்திராவிடம் முறையிட்டுள்ளோம். எனவே தாசில்தாராக சத்யன் இருக்கும்போதே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம் என்றனர்.
திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரகுமார் எஸ்.ஸை. சீனிவாசன் தலைமையில் திட்டக்குடி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இனியாவது விரைந்து பாரபட்சமில்லாமல் ஆக்கிரமிப்பு எடுக்கப்படுமா? என்கிறார்கள் திட்டக்குடி பகுதி மக்கள் மற்றும் சிவனடியார்கள்.