
புதுச்சேரி, தேங்காய்திட்டு துறைமுக பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள அவ்வைநகர் பகுதியில் ஒருவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அறிந்த முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை விசாரணையில் கொல்லப்பட்டவர் அரியாங்குப்பம் காக்காயன்தோப்பு பகுதியை சார்ந்த பிரபல ரவுடி அமுலு என்கிற அமுல்தாஸ் என்று தெரியவந்தது. இவர் வெடிகுண்டு தயாரித்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். விடியற்காலையில் தேங்காய்திட்டு துறைமுக பகுதியில் மர்ம நபர்களால் தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்ததால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் முதலியார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
இதேபோல் பண்ருட்டி தட்டாஞ்சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள பாலத்தின் கீழ் பெயர், விலாசம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண்பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.