நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி பொறுப்பு முதல்வர், தன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் முதல்வராக இருந்த தம்பிதுரை, காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியின் பொறுப்பு முதல்வராக கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார்.
பொறியியல் கல்லூரிக்கு முதல்வராக நியமிக்கப்படுபவர்கள், பொறியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கணிபொறி அறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற அவர், பொறியியல் கல்லூரி முதல்வராக நீடிக்கத் தகுதியில்லாதவர் என உதவி பேராசிரியர் புவனேஸ்வரி, புதுச்சேரி அரசுக்கும், காமராஜர் கல்லூரிக்கும் புகார் அளித்தார்.
இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என புவனேஸ்வரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரரின் மனு மீது 2 மாதத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து தம்பிதுரை அதே பதவியில் நீடித்ததன் காரணமாக, உதவி பேராசிரியர் புவனேஸ்வரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன், ஜனவரி 9- ஆம் தேதிக்குள் பொறியியல் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து தம்பிதுரை விலக உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பொறியியல் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து தம்பிதுரை விலகி விட்டதாக உயர் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.