விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் பகுதியான எக்கியர் அருகே இருக்கும், வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 14 பேரும், செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி 8 பேரும் என தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் அருந்தி 22 உயிரிழந்துள்ளனர். இது தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்திற்கான மூலப் பொருட்களை விற்றவர் உள்ளிட்ட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை கண்டறிந்து அதனை அழிக்கும் பணியிலும் கள்ளச்சாராயத்தை விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்.
அந்த வகையில், புதுச்சேரியிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் எல்லை பகுதியான கடலூரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி - கடலூர் எல்லை பகுதியை தமிழ்நாடு காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், புதுச்சேரியிலிருந்து தண்ணீர் பாட்டிலில் கடத்தி வரப்படும் கள்ளச்சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து அதனை அங்கேயே சாலையில் கொட்டி அழித்து வருகின்றனர்.