புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் மாத தொடக்கத்திலிருந்தே கரோனா நோய் தொற்று தீவிரமாகி வருகிறது. நேற்று புதுச்சேரி பா.ஜ.க மாநில செயலாளர் ரத்தனவேலுவிற்கு கரோனோ நோய் தொற்று ஏற்பட்டு அரசு கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் மாஸ்க் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வரும் இவர் சென்னை சென்று வந்தபோது நோய்த்தொற்றுடன் வந்துள்ளார்.
அவருக்கு ஏற்பட்டதை போல தொழிற்சாலையில் பணியாற்றிய ஐந்து ஊழியர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொழிற்சாலையில் பணியாற்றிய 35-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். பா.ஜ.க மாநில செயலாளரான ரத்னவேலு புதுச்சேரி பா.ஜ.க தலைமை அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளதால் பாஜகவின் அலுவலகத்திற்குள் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று 14 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 216 ஆக உயர்ந்தது. இவர்களில் 12 பேர் புதுச்சேரியையும், 2 பேர் காரைக்காலையும் சேர்ந்தவர்கள். இதில் 113 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 99 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல் புதுச்சேரியில் நடந்த மகளின் வளைகாப்பிற்காக சென்னையிலிருந்து கடந்த மாதம் வந்த ஜிப்மர் ஓட்டுநரின் மாமனார் ( 75 வயது) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காமல் இன்று (16.06.2020) இன்று உயிரிழந்தார். இதையடுத்து புதுச்சேரியில் இதுவரை 4 நபர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணராவ் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் இருவரும் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தனர்.
அப்போது அவர்கள், "இன்று புதுச்சேரியில் புதிதாக 14 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவால் பாதிப்ப்பட்டவர்கள் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 77 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 26 பேரும், புதுச்சேரியை சேர்ந்த வெளிமாநிலத்தில் 2 பேரும், காரைக்காலில் 4 பேரும், மாகே பகுதியில் 4 பேரும், ஆக மொத்தம் 113 பேர் கரோனா வைரஸ் பாதிப்பில் உள்ளனர். இதில் 99 பேர் இதுவரை குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.
புதுச்சேரியில் இதுவரை 10,486 பேருக்கு பரிசோதனை செய்துள்ள நிலையில், 10231 பேருக்கு பாதிப்பு இல்லை. பாதிப்பு காரணமாக பொதுமக்கள் ஒருங்கிணைந்து அனைவரும் முகக்கவசத்துடன் செல்ல வேண்டும்" என்றனர்.
மல்லாடி கிருஷ்ணாராவ் கூறும்போது, "புதுச்சேரியில் மாஸ்க் இல்லை என்றால் முதல்முறை 500 ரூபாய் அபராதமும், இரண்டாவது முறை 1000 ரூபாய்யும் அண்டை மாநிலங்களில் விதிப்பது போல் கடுமையாக அபராதம் விதிக்க வேண்டும். நவம்பர், டிசம்பரில் நோய் தொற்று அதிகமாகும் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இதனால் 6 மாதங்களுக்கு நோய் தடுப்புக்கு தயாராக சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க முதல்வரை கேட்க உள்ளோம்" என்றார்.