புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தேவையான கழிவறை வசதிகள் அங்கு இல்லை. இருக்கும் கழிவறைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நாப்கின் எரியூட்டும் இயந்திரம் இல்லை. இவற்றை சரி செய்ய வலியுறுத்தி ஜூலை 10 ந் தேதி இந்திய மாணவர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இதுவரை நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில் தான் நேற்று மாணவிகள் இயற்கை உபாதைகாக மரத்தடியில் ஒதுங்கியதை சுற்றுச்சுவர் ஓரமாக மறைந்திருந்த ஒருவன் தனது செல்போனில் படம் எடுக்க முயன்ற போது மாணவிகளே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் புகார் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் மாணவிகளுக்கு தேவையான கழிவறைகள், நாப்கின் எரியூட்டும் இயந்திரம் அமைக்க வேண்டும் என்பதையும், படம் எடுக்க முயன்ற நபர் மீது புகார் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் இன்று போராட்டம் அறிவித்தது. அதனால் கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.