விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது காட்டுசிவிரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தங்களது ஊரான காட்டுச் சிவிரி ஊராட்சியில், ஊராட்சியின் பொதுநிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதி மற்றும் குடிநீர் குழாய் பராமரிப்பு செய்ததாக போலியாக பில் தயாரித்து மோசடி செய்து பணம் எடுத்தது 10 ஆண்டுகளாக செயல்படாத ஊர்ப்புற நூலகத்திற்கு செலவு செய்வதாகவும் அங்கன்வாடி கட்டிடத்திற்கு கழிவறை கட்டாமலேயே கட்டியதாகவும் எடுத்தது இப்படி ஊராட்சியில் பல்வேறு முறைகேடான வழிகளில் சுமார் 70 லட்சம் ரூபாய் முறைகேடு செய்து பணம் சம்பாதித்துள்ளார் ஊராட்சி செயலாளர் இதற்காக ஊராட்சி செலவினங்கள் செய்ததாக கூறி போலியான பில்களை கடைகளில் வாங்கிக் கணக்கு காட்டி முறைகேடு செய்துள்ளார்.
முறைகேடு செய்ததற்கான ஆதாரங்களை 350 பக்கம் ஆவணங்கனுடன் தயார் செய்து ஏற்கனவே அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளோம். அது சம்பந்தமாக, இதுவரை எந்தவிதமான விசாரணையும் செய்யவில்லை. நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சுமார் ரூ.70 லட்சம் முறைகேடு செய்து அரசு பணத்தை கையாடல் செய்துள்ள ஊராட்சி செயலாளர் மீதும் அவருக்குத் துணை புரிந்த அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.