
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. விரல் ரேகை பதிவு, ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதம் மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக எடை தராசு அலுவலக கணினியுடன் இணைத்து ரசீது வழங்கிய பின்பு தான் நியாய விலை கடை எடை தராசு விற்பனை முனையத்துடன் இணைக்கப்பட வேண்டும், பொது விநியோகத் திட்டத்திற்கு தனி நலத்துறை அமைக்கவேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் வழங்குதல், ஐஏஎஸ் தலைமையில் ஊதிய குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்து 22-ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும், 23-ஆம் தேதி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும், 24 -ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 1200க்கும் மேற்பட்ட நியாய விலை கடை மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திர ராஜா கூறுகையில், 45 கிலோ எடையுள்ள ஒரு அரிசி மூட்டையைக் கொடுத்துவிட்டு 50 கிலோவுக்கு எடை போட்டு வழங்க வேண்டும் என்றால் எப்படி வழங்க முடியும்?
அதே போல் கோதுமை, எண்ணை உள்ளிட்ட அனைத்தும் ரேஷன் கடையில் உள்ள பொதுமக்களின் குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப வழங்குவது இல்லை. இதனால் நியாய விலை கடை பணியாளர்களுக்கும் பொது மக்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. உடனடியாக கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இது கடலூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது என்றார்.
கடலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் இளஞ்செல்வி கூறுகையில், போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சங்கத்தை சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். அனைத்து கடைகளும் மூடவில்லை. கடைகளை திறக்க மாற்று ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் தலைமையில் பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது விரைவில் முடிவுக்கு வரும் என்றார்.