கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ளது தொட்டியம் கிராமம். இந்த கிராமத்தின் பஸ் நிலையம் எதிரில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை, அந்த இடத்தில் சுமார் ஐந்து ஆண்டுகளாக ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஊரை ஒட்டி கடை உள்ளதால் மது அருந்துவோர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இந்த கடையை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் செய்துவந்தனர்.
பொதுமக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக கட்டிட உரிமையாளரும் டாஸ்மாக் கடையை காலி செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறி வந்துள்ளார். இதன் காரணமாக டாஸ்மாக் அதிகாரிகள் தொட்டியத்தில் இருந்து பங்காரம் செல்லும் சாலையில் உள்ள மகளிர் பொது கழிப்பிடம் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் டாஸ்மாக் கடையை மாற்றப் போவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஊர் மக்கள் அந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. அருகில் குடியிருப்பும் இருப்பதால் மது அருந்துவோர்களால் அதிக தொல்லை ஏற்படும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கிராம ஊராட்சி செயலாளர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் நேற்று சின்னசேலம் கச்சராபாளையம் சாலையில் உள்ள பைத்தந்துறை பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியல் செய்தனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்த சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை அழைத்து சமாதானம் செய்தனர். அப்போது டாஸ்மாக் கடையை அந்த இடத்தில் வைக்கக்கக்கூடாது என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மறியல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.