பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திற்கு என எவ்வித சலுகையும் பாராளுமன்றத்தில் காட்டவில்லை என்றார் அதிமுக எம்,பி,தம்பிதுரை.
கும்பகோணம் அருகே உள்ள திருநறையூர் ராமநாதஸ்வாமி ஆலயம் , திருச்சேறை சாரநாத பெருமாள் ஆலயம் ஆகிய கோயில்களுக்கு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.
"பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திற்கு என எந்தவிதமான சலுகையும் பாராளுமன்றத்தில் காட்டவில்லை. உரிமைக்காக குரல் எழுப்பிய அதிமுகவை சேர்ந்த 34 பாராளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்தது தான் எங்களுக்கான சலுகை. ஜிஎஸ்டி வரி அமுல்படுத்துவதை நாங்கள் எதிர்த்து வந்தோம். காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கான உரிமைகளை விட்டுக் கொடுக்கவில்லை. பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவியை அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்தது போல் பாஜக பேசி வருகிறது ஏற்புடையது அல்ல. பொதுவாக எதிர்க்கட்சிகளுக்கு இந்த பதவியை விட்டு தருவதுதான் வழக்கமாக உள்ளது. அதன் அடிப்படையில்தான் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவி அதிமுகவுக்கு கிடைத்தது.
பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் என்று நாங்கள் கூறுகிறோம் . பொன்.ராதாகிருஷ்ணனும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழகத்தில் 30 இடங்களை கைப்பற்றும் என்று கூறி வருகிறார். இப்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் கூட்டணியை முடிவு செய்யப்படவில்லை," என்றார்.
மேலும் "பத்திரிக்கையாளர் குருமூர்த்தி திராவிட கட்சிகளை குறை கூறி பேசிய கருத்துக்கு கண்டனத்துக்கு உரியது. உயர் வகுப்பினருக்கான பொருளாதார ரீதியில் பின்தங்கிய நபர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அதிமுக தொடர்ந்து எதிர்க்கும் என்று கூறிமுடித்தார்.