திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் ஆத்தூர், அக்கரைப்பட்டி, அம்பாத்துரை, காந்திகிராமம், செட்டியபட்டி, கலிக்கம்பட்டி, பஞ்சம்பட்டி, பித்தளைப்பட்டி, மணலூர், சித்தரேவு உட்பட 22 கிராம ஊராட்சிகள் உள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இந்த ஊராட்சிகளில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளில் மெகா மோசடிகள், பண சுருட்டல்கள் நடைபெற்று வருகிறது.
பயனாளிகளின் பெயர்களில் அக்கவுண்ட்களுக்கு (வங்கிக் கணக்கு) பணம் ஏற்றுவதற்கு பதிலாக ஊராட்சி செயலர்களின் உறவினர்கள், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்களின் உறவினர்கள் மற்றும் போலிக் கணக்குகளில் பயனாளிகளின் கூலி பணங்களை ஏற்றிவிட்டு சர்வ சாதாரணமாக ஏடிஎம் கார்டுகள் மூலம் பணத்தை எடுத்து கொள்ளையடித்து வருகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணிபுரிந்த மாற்றுத்திறனாளி வடிவேல் என்பவர் தனது மனைவியின் பெயரில் காந்திகிராமம் கனரா வங்கியில் அக்கவுண்ட் வைத்து அந்த அக்கவுண்டிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகளின் பணங்களை ஏற்றி வைத்தது நிரூபணமாகி பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இச்சம்பவம் மணலூர் ஊராட்சியில் நடைபெற்றது. ஆனாலும் தொடர்ந்து பாளையன்கோட்டை, போடிக்காமன்வாடி, முன்னிலைக்கோட்டை, பித்தளைப்பட்டி, பிள்ளையார்நத்தம், சித்தரேவு, அக்கரைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியத்திடம் கிராம மக்கள் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த திட்டம் மூடுவிழா காணும் திட்டமாக மாறி வருகிறது. குறிப்பாக பாளையன்கோட்டை ஊராட்சியில் தனியார் மில்வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் ஆண்கள் பெயரில் போலியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பயனாளியாக சேர்த்து அவர்களது பணங்களை எடுத்து 50க்கு 50 என்ற கணக்கில் பட்டுவாடா செய்துள்ளனர். இது அரசல் புரசலாக அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு தெரிந்து ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்துள்ளனர். அவரும் கண்துடைப்பாக விசாரணை நடத்திவிட்டு விட்டுவிட்டார்.
இதனால் அந்த ஊராட்சியில் புரோக்கர்கள் அதிகரித்துவிட்டனர். வாரம் எங்களுக்கு 2000கொடு, 3000கொடு என ஊராட்சி செயலரிடம் பேரம் பேசிக்கொண்டு ஜாம், ஜாம் என்று பணத்தை சுருட்டி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பாப்பாத்தி சட்டக்கல்லூரி மாணவர் முருகன், முன்னாள் மாவட்ட அதிமுக கவுன்சிலர் சேடபட்டி ராஜேந்திரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் வரை புகார் செய்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில் பத்திரிக்கையில் செய்தி வந்த மறுநாள் கண்துடைப்பிற்காக அதிகாரிகள் ஆய்விற்கு வருவார்கள். அப்போது வெளி வேலைக்கு சென்ற ஆட்களை வேன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து ஓடையில் இறக்கிவிட்டு வேலை செய்ததாக கணக்கு காண்பித்து விடுவார்கள். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகாரிகளுக்கும் மாதாமாதம் பங்கு பணம் (லஞ்சம்) செல்வதால் எந்த ஒரு அதிகாரியும் கண்டுகொள்வதில்லை.
இதுபோல ஆத்தூர், அக்கரைப்பட்டி, முன்னிலைக்கோட்டை ஆகிய ஊராட்சிகளில் முறைகேடுகள் அதிக அளவில் நடந்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு முன்னிலைக்கோட்டை ஊராட்சியில் ஊராட்சி செயலர் முறைகேடு செய்வதாக கூறி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொதுமக்களை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார். அடுத்த மறுநாள் அக்கரைப்பட்டி ஊராட்சி மல்லையாபுரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நூறு நாள் வேலைத்திட்ட முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி செயலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரை எதிர்த்து கோசமிட்டனர். தொடர்ந்து நூறு நாள் வேலைத்திட்டத்தை மோசடிகள், முறைகேடுகள் நடந்தும் மாவட்ட திட்ட இயக்குநர் கவிதா இதுகுறித்து கண்டுகொள்ளாததால் காய்ந்த மாடு கம்பங்காட்டில் புகுந்தது போல் ஊராட்சி செயலர்கள் இந்த திட்டத்தில் புகுந்து விளையாடுகின்றனர்.
கிராமங்களில் வறுமையை ஒழிக்க ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கொண்டு வந்த இத்திட்டம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளின் வங்கிக்கணக்கை உயர்த்தும் திட்டமாக மாறி வருகிறது. இத்திட்டம் மூலம் ஏழை மக்கள் பயன் அடைந்தார்களோ இல்லையோ ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் செல்வசீமானாக மாறி வருகிறார்கள். மத்திய அரசு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முதற்கட்டமாக ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணிகளை முழு தணிக்கை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்!