விழுப்புரம் மாவட்டம் செஞ்சி முல்லை நகர் பகுதி அருகே இருளர் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் பாபு. இவரது மனைவி 30 வயது நிரம்பிய குமாரி. இவர் தினசரி அப்பகுதியில் ஆடுகள் மேய்த்து வருவது வழக்கம். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த குமாரி ஆடுகளை வளர்த்து, அதை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குமாரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
அந்த நிலையிலும் எப்போதும் போல இவர் நேற்று காலை சுமார் பதினொரு மணி அளவில் செஞ்சிகோட்டை பகுதியிலுள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தின் அருகே தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். செஞ்சி-திருவண்ணாமலை சாலை பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் சாலையோரம் படுத்துக்கொண்டு வலியினால் மிகவும் துடித்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அய்யனார், டிரைவர் செல்வமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த குமாரிக்கு பிரசவ நேரம் நெருங்கியதால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அப்பகுதியிலிருந்த பெண்கள் உதவியுடன் பிரசவம் பார்த்துள்ளனர். அதன் பின்பு அதே இடத்தில் குமாரிக்கு சுகப் பிரசவமாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. உடனடியாக குமாரி மற்றும் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்குச் சேர்த்தனர். இதையடுத்து சமயோசிதமாகச் செயல்பட்டு சுகப்பிரசவம் செய்த மருத்துவ உதவியாளரைப் பொதுமக்கள் பலரும் பாராட்டினர்.