கோவை மாவட்டம், உக்கடம் பகுதிக்கு அருகே உள்ள கோட்டைமேடு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று, மாநகரில் எட்டு இடங்களில் சுமார் 2,000 பேருக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கோவை, உக்கடம் பகுதியில் 1997- ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புப் படித்து முடித்த சுமார் 120 முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து தங்களால் முடிந்த மக்கள் நலப்பணிகளையாற்றி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவையில் உக்கடம், டவுன்ஹால், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், கரும்புக்கடை உள்ளிட்ட எட்டுப் பகுதிகளில் இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. சுமார் 2,000 பேருக்கு கபசுரக் குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது.
இது பற்றி ரிஜ்வான் கூறுகையில், "கடந்த 2 ஆண்டுகளாய் மாணவ சமூகத்துக்கும், பொதுமக்களுக்கும் எங்களால் இயன்ற சேவைப் பணிகளைச் செய்து வந்தோம். கஜா புயல், கேரள மழை வெள்ளம் ஆகிய காலங்களில் மக்களின் துயர் துடைக்க நாங்கள் ஒன்றாக இணைந்து, சுமார் 7 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிகளைச் செய்தோம். கரோனா பொதுமுடக்கக் காலத்திலும் சுமார் 140 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து உதவிகளைச் செய்தோம்.
அதன் ஒரு பகுதியாய் இன்றைய கரோனா காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாகவும், மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் விதமாகவும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது" எனக் கூறினார்.