அரியலூர் - தஞ்சை மாவட்டங்கள் இடையே ஓடுகிறது கொள்ளிடம் ஆறு. இந்த ஆற்றில் ஆழ்குழாய் போர்வெல் போட்டு அங்கிருந்து நாகை மாவட்டத்திற்கு குடிதண்ணீர் கொண்டு செல்லும் பணிக்காக நேற்று காலை பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த துத்தூர், குருவாடி, தேளூர், ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் ஆழ்குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
தகவல் அறிந்த கோட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் கொள்ளிடம் ஆற்றில் ஏற்கனவே அளவுக்கதிகமான மணலை சுரண்டி எடுத்ததால் மழை நீர் தேட்க முடியாமல் ஆறு வறண்டு கிடக்கிறது. இப்பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும். அப்படி கட்டப்பட்டு தண்ணீர் தேங்கினால் வேறு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியும், அதுவரை நாகை மாவட்டத்திற்கு ஆழ்குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது என்று போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 60 பேரை கைது செய்த போலீசார், அவர்களை ஏலாக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அரியலூர் மாவட்ட எல்லையோரப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.