முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என இரண்டு முதல்வர்களை உருவாக்கிய பெருமை தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியாகும். இப்படிப்பட்ட சட்டமன்ற தொகுதியான ஆண்டிபட்டி நகரில்தான் ஜெயலலிதா உருவாக்கிய அனைத்து மகளிர் காவல் நிலையமும் செயல்பட்டு வருகிறது.
இப்படி இருக்கக்கூடிய ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக புகார் அளிக்க வரும் பெண்களிடம் புகாரைப் பெற்றுக் கொண்டு உரிய விசாரணை நடத்தாமல் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மனு ரசீது வழங்காமல் இழுத்தடிப்புதுடன் மனு அளிப்பவர்களை தகாத வார்த்தைகள் பேசுவது அங்கு பணிபுரியும் பெண் காவலர்களின் அன்றாட செயலாக உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள், புகார் அளிக்கும் பட்சத்தில் அந்த எதிர் தரப்பிடம் பணத்தையும் வாங்கிக்கொண்டு ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ளும் விதமும் தொடர்கதையாகவும் இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த கரோனா காலத்தில் மக்கள் புகார் அளித்தால் மனு ரசீது அளிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று காவலர்கள் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை சார்பில் அறிக்கை விட்ட நிலையில், புகார் அளிப்பவர்களுக்கு மனு ரசீது கூட அளிக்க முடியாது என்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலர்கள் வெளிப்படையாகவே கூறிவருகிறார்கள்.
இதனால் பொதுமக்கள் புகார் கொடுக்கவே தயங்கி வருகின்றனர். இப்படி பெண்கள் அளிக்கும் புகாருக்கு பெண் காவலர்களே எதிராக செயல்படுவது அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது. அதோடு இரு தரப்பினரும் ஒற்றுமையாக செல்ல விரும்பினாலும், பணம் வராவிட்டால் வழக்குப்பதிவு செய்வதும் நடைமுறையாக உள்ளது.
இதனால் இந்த அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதைப்பற்றி சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொலைபேசியில் பேசினால்கூட அவர்களை ஒருமையில் திட்டுவது பெண் காவலர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களைக் கூட பெண் காவலர்கள் ஒருமையில்தான் பேசி வருகிறார்கள். இதுபோன்ற அடாவடி செயல்களுக்கு மாவட்ட கண் காணிப்பாளர் சாய் சரண் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது. அதோடு எஸ்.பி சாய்சரண்னுக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலர்களின் அடாவடி நடவடிக்கை பற்றியும் பணம் வசூல் பற்றியும் புகார் மனுவும் அனுப்பியுள்ளனர்.