கொடைக்கானல் அடுக்கம் மலைச்சாலையில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும் அப்பகுதி மக்களும் தவித்துவருகின்றனர். கோடை இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இப்படி கொடைக்கானலுக்குச் செல்ல வத்தலகுண்டு, பழநி வழியாக இரண்டு மலைகள் உள்ளன. கேரளா மாநிலம் திருப்பூர், கோவை, ஈரோடு பகுதியில் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகள் பழனி சாலை வழியாகவும் தேனி மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து வருபவர்கள் வத்தலகுண்டு சாலை வழியாகவும் கொடைக்கானலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் தேனி மாவட்டத்திலிருந்து கொடைக்கானலுக்கு விரைவாக செல்ல அடுக்கம் வழியாக சாலையைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. அதன் பின்னர் மீண்டும் சீரமைப்பு பணிகளுக்குப் பிறகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. கொடைக்கானலிலிருந்து ஒருமணி நேரத்தில் பெரியகுளம் சென்றுவிடலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த சாலையைப் பயன்படுத்திவருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
பெருமாள் மலையிலிருந்து அடுக்கம் செல்லும் சாலையில் 5 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு சாலைகளில் பாறைகள் உருண்டன. மேலும், தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும், பொதுமக்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் கேரளாவிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்திருந்தனர். போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். அதைக் கண்ட வனத்துறையினர், மாற்று பாதையில் செல்ல வலியுறுத்தியுள்ளனர். அதுபோல் கொய்யா தோப்பு, தாமரைக்குளம், பாலமலை தங்க குடிசை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மூன்று இடங்களில் திடீரென்று மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
இதனால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்து ஊழியர்கள் மற்றும் வனத்துறையினர் நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். மலைச் சாலையில் அடிக்கடி மண்சரிவு ஏற்பட்டுவருகிறது. இதனால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கிராமத்திலிருந்து விவசாயிகள் கொடைக்கானல் மற்றும் பெரியகுளத்திற்கு விளை பொருள்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் வலியுறுத்திவருகின்றனர்.