காவிரி வரைவு திட்ட அறிக்கை தமிழக நலனுக்கு எதிரானது என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர்,
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற உத்திரவை அவமதிக்கும் வகையில் செயல் திட்டத்தை மத்திய நீர்வளத் துறை செயலாளர் up சிங் தாக்கல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இது முற்றிலும் நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கோடு நடுவர் மன்ற தீர்ப்பை முடக்கும் வகையில் தமிழக நலனுக்கு எதிராகவும் உள்ளது.
குறிப்பாக அனைகளின் நிர்வாக அதிகாரம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும், அமைப்பின் நிர்வாக அலுவலகம் பெங்களுர் நகரத்தில் அமைக்கப்படும் எனவும், அமைப்பில் மாநிலங்களுக்குள் ஒத்தக் கருத்து ஏற்படாவிட்டால் மத்திய அரசை அனுக வேண்டும் என்றும் மத்திய அரசே இறுதி முடிவு எடுக்கும் எனவும் செயல் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தும், நீதிமன்றம் தான் விரும்பும் பெயரை வைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை முற்றிலும் தமிழக நலனுக்கு எதிரானதும், கர்நாடகாவிற்கு ஆதரவானதுமாகும், மேலும் தனது பொருப்பை தட்டி கழிப்பதாகும், நீதிமன்றத்தை அவமதிப்பதோடு, நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை முடக்கும் செயலும் ஆகும்.
இது குறித்து தமிழக அரசு காவிரி நடுவர் மன்ற இறுதி தீப்பை பின்பற்றி முழுஅதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யும் வகையில் கருத்துக்களை எழுத்துப் பூர்வமாக நீதிபதிகளுக்கு சமர்பிக்க வேண்டும்.
மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணான அறிக்கை அளித்துள்ள UP சிங் பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்த வேண்டும். தீர்ப்பு குறித்து விவாதிக்க அவசரமாக அனைத்துக் கட்சி, விவசாயிகள் சங்க கூட்டத்தை நாளை (15.05.2018) கூட்ட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.