காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் தொடர் ரெயில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழகத்தில் காவிரி உரிமை மீட்பு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க., ஒரு சில தலைவர்களை சதி திட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள், பா.ஜ.க.வின் சதியை முறியடிக்க காவிரி போராட்டத்தை ஒன்றுபட்டு தீவிரப்படுத்த வேண்டும். இதற்காக இருசக்கர வாகன பேரணி நடத்துகிறோம்.
வருகிற 25-ந் தேதி முதல் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில், வேதாரண்யத்திலிருந்து இந்த பேரணி தொடங்குகிறது. இப்பயணம் தஞ்சாவூர், கல்லணை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், மேட்டூர், தர்மபுரி, வேலூர், காஞ்சீபுரம், சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால், நாகப்பட்டினம் வழியாக வருகிற 29-ந்தேதி திருவாரூர் நகரத்தில் நிறைவடையும்.
மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மே 1-ந் தேதி முதல் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முதல் திருவொற்றியூர் வரை ரெயில் பாதையில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார்.