பெண் குழந்தைகள் மறுவாழ்வுக்கு கூடுதல் உதவிகள் வழங்க - ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் பரிதாபமான நிலை குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி வேதனையளிப்பதாக உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடந்து வருகின்றன.
உள்ளூரில் அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில், குடும்பத்தில் உள்ள தாயும், தந்தையும் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ செல்லும்போது தங்களின் பெண் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்வதோ அல்லது வீட்டில் தனித்து விட்டுச் செல்வதோ சாத்தியமில்லை. குழந்தைத் திருமணங்களுக்கு இது தான் முக்கியக் காரணம் ஆகும்.
இம்மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் வேலை தேடி வெளியூர் செல்வது தான் இந்தப் பிரச்சினைக்கு காரணம் என்பதால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மட்டுமின்றி இவ்வழக்கம் உள்ள அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். குழந்தைகள் திருமண முறையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்ட சிறுமி உள்ளிட்ட பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் மறுவாழ்வுக்கு, சிறுவர் திருமணத் தடை சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை விட கூடுதலான உதவிகளை வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.