
எல்லாவற்றிலும் அரசியலை கலந்து மு.க.ஸ்டாலின் ஆதாயம் தேட பார்ப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், மேட்டூர் அணை இருமுறை அதன் முழுகொள்ளளவை எட்டியும், அணைகளில் திறந்து விடப்படும் காவிரி நீர் வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படாமல் நேராக கடலில் கலப்பது வேதனையளிக்கிறது. “நீர் மேலாண்மை” குறித்த எவ்வித தொலைநோக்குப் பார்வையும் அ.தி.மு.க அரசுக்கு இல்லாததே இதற்கு காரணம் என கூறியிருந்தார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரி, கிளை ஆறுகள் விநாடிக்கு 30,000 கனஅடி நீரை மட்டுமே பாசனத்துக்கு கொண்டு செல்ல இயலும் 30 ஆயிரம் கனஅடி நீரை தாண்டும்போது அது வெள்ள பெருக்கைத்தான் ஏற்படுத்தும்; பாசனத்துக்கு உதவாது. திருவாரூர் ஐநூற்று பிள்ளையார் கோவில் குளம் 25 ஆண்டுகளாக கால்வாய்நீர் மூலம் நிரம்பியது இல்லை. வான் மழை மூலம் நேரடியாக பெறும் தண்ணீர்தான் ஐநூற்று பிள்ளையார்கோவில் குளத்தை நிரப்புகிறது.
எல்லாவற்றிலும் அரசியலை கலந்து ஆதாயம் தேட முயற்சித்து தோல்வி பள்ளத் தாக்கில் துவண்டு விழும் மு.க.ஸ்டாலின் தன்னுடைய அரசியல் பயணத்தை ஆக்கப்பூர்வமாக ஆக்கிக்கொள்வது அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.