Skip to main content

தமாகா தவறான நிலைப்பாட்டால் திசை தெரியாமல் திக்குமுக்காடுகிறது -கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தவறான நிலைபாட்டால் திசை தெரியாமல் திக்குமுக்காடுகிறது. என காங் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.  

 

 

மேலும் அவர் இதுகுறித்து பேசுகையில்.

 

கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் தலைமையில், 50-க்கு மேற்பட்டவர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்ததற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். 

 

தமாகா செல்லும் பாதை தவறான பாதை. அது, தனி மனிதரை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட கட்சி. கட்சியின் தவறான நிலைப்பாட்டால் திசை தெரியாமல் திக்குமுக்காடி வருகிறது. எனவே தமிழகத்தில் உள்ள தமாகாவினர் அனைவரும் காங்கிரஸில் இணைய வேண்டும். 
 

 Tmc is stuck in the wrong position, says KS Azhagiri

 

ராகுல் காந்தி காங்கிரஸ் ஆட்சியை மலரச் செய்வார். தற்போது அவர், கட்சியை மறு சீரமைப்பு செய்யவுள்ளார். தமிழகத்தில் 8 வழிச் சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றைத் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தை அறிந்து செயல்படுத்த வேண்டும். எந்தத் திட்டமாக இருந்தாலும், மக்களுக்கு நன்மைகள் தரும் வகையிலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும்தான் செயல்படுத்த வேண்டும்.


 

மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்காதது அதிமுக அரசுக்கு மிக பெரிய தோல்வியாகும். வானம் பொய்த்து விட்டது என்று கூறுவதற்கு ஒரு அரசு தேவையா என்று சிந்தித்து பார்க்கவேண்டும். குடிநீர் பஞ்சத்தை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு நீர்நிலைகளைத் தூர்வாரி, சரிவர நீரைத் தேக்காத அரசு, வானம் பொய்த்துவிட்டது எனக் காரணம் கூறுவது சரியானதல்ல.



தமிழகத்தில் பாஜக கூட்டணி தோல்வியடைந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. தமிழகத்தில் வெற்றி பெற்ற திமுக - காங்கிரஸ் கட்சிகளின் மக்களவை உறுப்பினர்களால் எந்தப் பயனும் இல்லை எனக் கூறுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. தமிழகத்தை யார் ஆட்சி செய்தாலும் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்பதுதான் ஜனநாயகம். நாங்குநேரி சட்டசபை தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

 

பேட்டியின் போது கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பி.பி.கே.சித்தார்த்தன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கே.ஐ.மணிரத்னம், நகரத் தலைவர் பாலதண்டாயுதம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்