சென்னை கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் இன்று இது குறித்து மாநில மகளிர் ஆணையத் தலைவி விசாரணை நடத்தினார்.
பின் அவர் அளித்த பேட்டியில், “இரு விதமான புகார்கள் இருந்தன. எனக்கு எழுத்துப்பூர்வமாகக் கொடுத்துள்ளார்கள். போராட்டம் நடத்திய பெண்கள் 4 பேர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர். அறிக்கை தயார் செய்து சமர்ப்பித்ததும் மீண்டுமொரு செய்தியாளர் சந்திப்பில் அது குறித்து கூறுகிறேன். அதிகமான மாணவிகள் புகார் கொடுத்துள்ளார்கள். அதை இன்னும் எண்ணவில்லை. ஏறத்தாழ 100 இருக்கும். தனியாக 12 மாணவிகளிடம் பேசினேன். சில மாணவிகள் ஹைதராபாத் சென்றிருப்பதால் ஜூம் மூலம் பேசினேன்.
கலாஷேத்ராவில் இயக்குநர், துணை இயக்குநர் யாரும் இல்லை. கல்லூரி முதல்வர் மட்டும் இருந்தார். அவரும் நலம் விசாரித்துவிட்டுச் சென்றுவிட்டார். மாணவர்களிடம் போராட்டத்தை நிறுத்திவிட்டு படியுங்கள் எனச் சொல்லியுள்ளேன். கண்டிப்பாக இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை கொடுத்துள்ளேன். போராட்டத்தைக் கைவிடச் சொன்னதும் ஒத்துக்கொண்டார்கள். ஏனெனில் 90% மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ளார்கள். நாளை உறுதியாக நிர்வாகத்திடம் பேசுவேன்.
மாணவிகள், ‘எங்களுக்கு ஏப்ரல் 12 வரை தேர்வு உள்ளது. அதன் பின்பே நாங்கள் ஊர் திரும்ப முன்பதிவு செய்துள்ளோம். இணையத்தில் தேர்வு எழுத முடியாது. எங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும். அதனால் எங்கள் தேர்வை முடித்துவிட்டு தான் செல்வோம்’ எனச் சொல்லியுள்ளார்கள். என்னால் அவர்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. ஏனென்றால், இயக்குநர் இல்லை. கண்டிப்பாக இன்று அல்லது நாளை மாலை இயக்குநரைச் சந்தித்து பேசிவிடுவேன். 2008 இல் இருந்து இந்த செயல்பாடுகள் இருப்பதாகச் சொல்லியுள்ளார்கள். முன்னாள் மாணவிகளும் என்னிடம் பேசினார்கள். அவர்களிடம் புகாராகக் கொடுக்கச் சொல்லியுள்ளோம்” என்றார்.
இந்நிலையில், கலாஷேத்ரா மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கடந்த 2 நாட்களாக பேராசிரியர்கள் 4 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்தப் போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. மாநில மகளிர் ஆணையத் தலைவி மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்த பின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.